நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் நீதிபதி ஏ.பி.ஷா கருத்து!
புதுடில்லி, மார்ச் 20 – ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் கூட்டாட்சி மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானது என்று, டில்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் தெரிவித்துள்ளார்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நாடாளு மன்றக் கூட்டுக் குழுவின் ஆய்வுக் கூட்டம் 17.3.2025 அன்று நடைபெற்றது. இதில்,டில்லி உயர்நீதிமன்றத்தின் மேனாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா கலந்து கொண்டு தனது கருத்துகளை முன்வைத்தார்.
அப்போது பேசிய அவர், ஒரே தேர்தல் நடத்த கொண்டு வந்துள்ள மசோதாக்கள் சட்ட சிக்கல்கள் கொண்டதாக உள்ளதெனத் தெரிவித்தார். மாநில சட்ட பேரவைகளின் தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்ற அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு வழங்கி இருப்பது சரியானது அல்ல என்றும் கூறினார். இந்த மசோதாக்கள் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை மற்றும் கூட்டாட்சி தத்துவங்களுக்கு எதிரானது என்றும் கூறினார்.
ஒரே தேர்தல் மூலம் செலவு குறையும் என்ற வாதத்துக்கும் நீதிபதி ஷா எதிர்ப்பு தெரி வித்தார். இதேபோல், இந்த கூட்டத்துக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் பரிந்துரை குழுவில் இடம் பெற்றிருந்த மேனாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரிஷ் சால்வேயும் அழைக்கப்பட்டிருந்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவ ரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
முன்னதாக ஒரேநாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் அறிக்கை அளித்தது. இத்திட்டம் குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.