புதிய கல்விக் கொள்கையை எதிர்த்துப் பெண்கள் வீதிக்கு வந்து போராடவேண்டும்!
துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி அறைகூவல்!
சென்னை, மார்ச் 19 வட சென்னை மாவட்ட இளைஞரணி சார்பாக திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கம், ‘திராவிட மாடல்‘ அரசினைப் பாராட்டியும் மற்றும் கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு “பெரியார்” பெயர் சூட்டியதற்கு நன்றி தெரிவித்தும் பெரியமேடு நேவல் மருத்துவமனை சாலையில் 16.03.2025 அன்று மாலை 6.30 மணிக்கு கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் வட சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வெ.கார்த்திக் வரவேற்று பேசினார். பின்னர் நீச்சல் வீரரும், சட்டக்கல்லூரி மாணவருமான ம.பூவரசன் தொடக்க உரையாற்றினார். முன்னிலை ஏற்ற வட சென்னை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், வட சென்னை மாவட்ட கழக செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், திமுக மூத்த உறுப்பினர் கிருஷ்ணன், இளைஞரணித் தோழர் சு.பெ.தமிழமுதன், விசிக மாவட்டப் பொருளாளர் பொன்னிவளவன், உயர்நீதிமன்ற வழக்குரைஞர் துரை.அருணைத் தொடர்ந்து திராவிட மகளிர் பாசறைச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை ஆகியோர் கூட்டம் கூட்டியத்திற்கான விடயங்களை மிகத் தெளிவாக எடுத்துரைத்தனர்.
அவர்களின் உரையைத் தொடர்ந்து தெருமுனைப்பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகை தந்த சிறப்புப் பேச்சாளர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவனி மற்றும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த வருகை தந்த அனைவருக்கும் இளைஞரணி சார்பாக பயனாடை அணிவிக்கப்பட்டது.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மாநில இளைஞரணித் துணைச்செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் உரையில் திராவிடர் கழகப் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சிதம்பரம் கோயிலையும், போகர், பண்டா ரத்தார்களிடம் பறிக்கப்பட்ட பழனி முருகன் கோயிலைப் பார்ப்பனர்களிடமிருந்து இந்து சமய அறநிலையத்துறை மீட்டு மீண்டும் பண்டாரத்தார்களிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்கள் நலனுக்காக கடன் வாங்கிய தமிழ்நாட்டு அரசை குற்றம் சொல்லும் பாஜக; ஒன்றியப் பிரதமர் மோடி 188 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறாரே! இது யாருக்காக வாங்கினார்? அம்பானிக்கா? அல்லது அதானிக்காக வாங்கினாரா? இதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் எனவும், நம் குழந்தைகளின் கல்விக்காக முன்களத்தில் நின்று சமர் செய்யும் ‘திராவிட மாடல்’ அரசினை பாதுகாக்க வேண்டும் என்று பேசினார்.
நிறைவாக சிறப்புரையாற்றிய திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர சே.மெ.மதிவதனி தனது உரையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு மருத்துமனைக்கு பெரியார் பெயர் வைத்ததற்கு காரணம் கேட்டவர்கள் நெகிழும் படி இருந்தது. 1929 இல் தந்தை பெரியார் நிறைவேற்றிய பெண்களுக்குச் சொத்துரிமை எனும் தீர்மானப்படி தான் 1989 கலைஞர் சட்டமாக்கினார். தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளினை அகற்றியவர் கலைஞர். ஆனால் அதற்கு ஏற்பட்ட சட்டத் தடைகளை முற்றிலும் நீக்கியவர் நம் ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின்.
திராவிடர் கழகத் தீர்மானம் என்பது அனைவருக்குமானது!
இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத 69% இட ஒதுக்கீட்டிற்கு பெரும் பங்காற்றியவர் எங்கள் தலைவர் ஆசிரியர் வீரமணி அய்யா தான். எனவே தான் சொல்கிறோம் திராவிடர் கழகத் தீர்மானம் என்பது ஏதோ 100 பேர்கள் கையெழுத்துப்போட்டு அவர்களுக்கு மட்டுமானதல்ல, மாறாக அனைவருக்குமானது. மேலும் திராவிடம் என்பது உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தத்துவம் என்றும் எடுத்துரைத்தார். தமிழைக் காட்டுமிராண்டி என்று சொன்ன தந்தை பெரியார் தான் தமிழை தான் ஆதரிப்பதற்கான மூன்று காரணங்களையும் விளக்கிச்சொன்னார். குறிப்பாக 1938 இல் ஹிந்தியையும், சமஸ்கிரு சனியனையும் ஒழிக்க வேண்டும் என்று அன்று சொன்ன அதே நிலைதான் இன்றைக்கும் தமிழ்நாட்டில் தொடர்கிறது. இங்கு சிலர் தங்களை ஆண்ட பரம்பரைகள் என்று சொல்லிக்கொள்கிறார்கள் ஆனால் இங்கு அனைவரும் இரண்டாயிரம் ஆண்டுகளாக அடிமைப் பரம்பரைகளாகத் தான் இருந்தோம். காரணம் அந்த காலத்தில் நம்மில் எத்தனை பேர் இரண்டு டிகிரி, எத்தனை பேர் டாக்டர், எத்தனை பேர் பொறியாளர் என்று பொட்டில் அடித்தார் போல் சவால் விடுத்து உரையாற்றினார்.
தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் இந்த 92 வயதிலும் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் பேசும் போது, ‘‘பெண்களே நீங்கள் முற்போக்காக சிந்திக்க வேண்டும், ஜாதி, மத மற்ற சமூகம் அமைய ஆதரவு தரவேண்டும்‘‘ என்று சொன்னால், நாங்கள் யாருக்காகப் பேசுகிறோம்? யாருக்காக போராடு கிறோம்? என்பதை சிந்தித்து பாருங்கள்.
தமிழ்நாட்டில் மோடி அலை இல்லை இம்மண்ணில் வீசும் ஒரே அலை –
தந்தை பெரியார் அலை!
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்துப் பெண்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். கல்விக்காக தரவேண்டிய 2152 கோடியை நிறுத்திவைத்து கொண்டு மோடி மிரட்டுகிறார், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கையெழுத்து போட வேண்டும் என்று மிரட்டுகிறார் ஆனால் எதற்கு அஞ்சாமல் களமாடும் ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் அரசினை பாதுகாக்கும் முன் களத்தில் முதல் ஆளாக திராவிடர் கழகமும் அதன் தோழர்களும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இறுதியாக 2014–லிலும் சரி 2019–லிலும் சரி தமிழ்நாட்டில் மோடி அலை இல்லை இம்மண்ணில் எப்பொழுதும் வீசும் ஒரே அலை அது தந்தை பெரியார் அலை. கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்த மற்றும் வருகை தந்த அனைவருக்கும் வட சென்னை மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் ச. சஞ்சய் நன்றி கூறினார். கூட்டம் நடந்திடவும், கூட்டத்திற்கு வருகை தந்த 200–க்கும் மேற்பட்டவர்களுக்கு தண்ணீர், தேநீர் ஆகியவற்றை பெரியமேடு 58 வார்டு மேனாள் கவுன்சிலர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார்.
துண்டறிக்கை விநியோகம்!
கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக மாவட்டச் செயலாளர் சு.அன்புச்செல்வன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் மு.பசும்பொன் செந்தில் குமாரி, ச.சஞ்சய், அரும்பாக்கம் தாமோதரன் ஆகியோர் திராவிடர் கழக இளைஞரணியின் சார்பாக அச்சிடப்பட்ட திராவிடர் கழகத்தின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பெரியமேடு வீடுகளிலும், பொதுமக்களிடமும் நேரடியாக வழங்கினர்.
கழகத்தில் இணைந்த புதிய தோழர்
நாமக்கல்லைச் சேர்ந்த மென்பொறியாளர் ‘‘பிரதீப்” அவர்கள் துணைப்பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி முன்னிலையில் தன்னை திராவிடர் கழக உறுப்பினராக இணைத்துக்கொண்டார். அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி பயனாடை அணிவித்து வரவேற்றார்.
கூட்டத்தில் பங்கேற்றோர் விவரம்
கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், கழக காப்பாளர் கி.இராமலிங்கம், கழக மாவட்ட அமைப்பாளர் ஓட்டேரி பாஸ்கர், கழக மாவட்ட துணைத் தலைவர் நா.பார்த்திபன், கழக மாவட்ட இளைஞரணித் துணைச் செயலாளர் த.பரிதின், கழக மாநில மாணவர் கழக செயலாளர் தொண்டறம், திமுக தலைமைச் செயற்குழு கே.எஸ்.நாதன், திமுக எழும்பூர் தெற்குப்பகுதிச் செயலாளர் வி.சுதாகர், விசிகவின் மாவட்ட பொருளாளர் பொன்னிவளவன், மாமன்ற உறுப்பினர் இராஜேஸ்வரி சிறீதர், 58 வட்ட திமுக செயலாளர் மேனாள் மாமன்ற உறுப்பினர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, மதிமுக வட்டச் செயலாளர் மாறன், சிபிஅய் எழும்பூர் தலைவர் ரஞ்சித், சிபிஅய் (எம் )வட்டத் தலைவர் மனோகரன், வட சென்னை மாவட்ட பக செயலாளர் இஜாஷ் ஹுசைன், ப.க. மாவட்ட அமைப்பாளார் பா.இராமு,கொடுங்கையூர் தங்கமணி, தங்க.தனலெட்சுமி, அயன்புரம் துரை ராசு, வியாசர்பாடி செல்வராஜ், மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர் த.மரகதமணி, தென் சென்னை மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர் மு.பவானி, அரும்பாக்கம் தாமோதரன், தருமபுரி யாழ்திலீபன், சே.மெர்சி, திடல் க.கலைமணி, பூவை பெரியார் மாணாக்கன், திமுகவின் வட்டச்செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர், பெண்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.