புதுச்சேரி, மார்ச் 18- புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்எஸ்எஸ் கொள்கையை அமலாக்குவதாக குற்றம் சாட்டி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, கேள்வி எழுப்பிய தன்னை பேச அனுமதிக்காமல் எதிர்க் கட்சியினர் குறுக்கிடுவதாக குற்றம்சாட்டி இருக்கை மேல் ஏறி நின்று பேச அனுமதிக்குமாறு என்.ஆர்.காங்கிரஸ் பெண் எம்எல்ஏ பேரவையில் வலியுறுத்தினார்.
புதுச்சேரி சட்டப்பேர வையில் நேற்று (17.3.2025) கேள்வி நேரத்தின்போது என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ சந்திர பிரியங்கா, “புதிய கல்விக் கொள்கை அமலால் இந்த கல்வியாண்டு முதல் ஆல் பாஸ் முறை ரத்தாகியுள்ளது. அதை தொடர முடி யுமா? தொழிற் சார்ந்த படிப்புகளை கற்றுதர கட்டமைப்பு உள்ளதா?” என்று கேள்வி எழுப் பினார்.
அதற்கு கல்வியமைச்சர் நமச்சிவாயம்,”இந்த கல்வியாண்டில் ஆல் பாஸ் முறையில் எந்த மாற்றமும் இல்லை. இதுவரை 52 அரசு பள்ளிகளில் தொழில் சார்ந்த பயிற்சியாளர், பயிற்சிக் கூடம் உருவாக்கி யுள்ளோம். அடுத்த கல்வி யாண்டில் 14 பள்ளிகளில் செய்வோம். வரும் 2028ஆம் ஆண்டுக்குள் அனைத் துப் பள்ளிகளிலும் செய்வோம்” என்றார்.
அதையடுத்து எம்எல்ஏ சந்திர பிரியங்கா, “புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு தொழிற் பயிற்சி தந்தால் அவர்கள் படிக்க வேண்டும் என்ற நோக்கம் மாறிவிடும்” என்றார். அப்போது திமுக எம்எல்ஏ நாஜிம் குறுக்கிட்டபோது, “உங்கள் பேரக்குழந்தையும், இங்குள்ள பலரின் குழந்தைகளும் சிபிஎஸ்இ பள்ளிகளில்தான் படிக்கிறார்கள்” என்றார்.
அதற்கு “புதிய கல்விக் கொள்கை வேறு – சிபிஎஸ்இ கொள்கை வேறு” என்று திமுக எம்எல்ஏக்கள் பதில் தந்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “ஆர்எஸ்எஸ் அர சாக புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் அரசு மாறுகிறது. தந்தை தொழிலைதான் குழந்தைகள் செய்ய வேண்டுமா? புதிய கல்விக் கொள்கையை முதலமைச்சர் ஏற்கிறாரா?” என்றார்.
அதைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் இருநது வெளிநடப்பு செய்தனர்.