புதுடில்லி – சென்னை சிட்டி விரைவு ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வாய்ப்பு இல்லையாம் தெற்கு ரயில்வே அதிகாரி தகவல்

viduthalai
2 Min Read

சென்னை, மார்ச் 18 புதுடெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் (ஜிடி) விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

பயணிகள் கோரிக்கை

தமிழ்நாட்டில் இருந்து வேலைவாய்ப்புக்காகவும், மேற்படிப்புக்காகவும், நுழைவுத்தேர்வு, நேர் காணல், ஒன்றிய அரசு சம்பந்தமான அலுவல்கள் போன்றவைகளுக்காக தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் புதுடில்லிக்குப் பயணிக்கின்றனர். மேலும், தமிழ்நாட்டில் இருந்து வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் விடு முறை நாட்களில் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

அதேநேரம், தென் தமிழ்நாட்டுக்கு போதிய ரயில் வசதி இல்லை. வடஇந்தியாவில் இருந்து கன்னியாகுமரிக்கும், தென் தமிழ்நாட்டில் இருந்து டில்லி, ஆக்ரா போன்ற பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், புதுடில்லியில் இருந்து சென்னைக்கு இயக்கப் படும் ரயிலை கன்னியா குமரி வரை நீடிக்க பய ணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து, கன்னியா குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: டில்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், துரந்தோ எக்ஸ்பிரஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இயக்கப் படுகின்றன.

ஆனால், இவை சென்னை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. அதேபோல், திருக்குறள் விரைவு ரயில் கன்னியாகுமரி வரையும், சம்பர்க் கிராந்தி விரைவு ரயில் மதுரை வரையும் இயக்கப்படுகின்றன. இந்த திருக்குறள் ரயிலை நாள்தோறும் இயக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை ஆகும்.

நீட்டிக்க வாய்ப்பு இல்லை

இதுதவிர, புதுடில்லி யில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயிலை திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

தாம்பரத்தில் இருந்து விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மதுரை, நெல்லை மார்க்கத்தில் கன்னியாகுமரி வரை இரட்டை பாதையாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த ரயிலை நீட்டிப்பு செய்து இயக்கினால், தென் மாவட்ட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “புதுடில்லி – சென்னை இடையே இயக்கப்படும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வாய்ப்பு இல்லை. அதேநேரம், கன்னியாகுமரி – வட மாநிலங்களுக்கு இடையே புதிய ரயில் சேவை கோரி கோரிக்கை வைக்கலாம். அதை ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து முடிவெடுக்கும்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *