புதுடில்லி, மார்ச் 18 அடுத்த ஆண்டிற்கான குடியரசு நாள் அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த விவரங்களை ஒன்றிய அரசு சேர்க்க வேண்டும் என மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
மக்களவை விவாதத்தின் போது பேசிய டி.ஆர்.பாலு குடியரசு நாளுக்கான அலங்கார ஊர்திகளை தேர்வு செய்யும் குழு, தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களை அங்கீகரிக்க தவறிவிட்டதாக தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை வெள்ளையர்கள் மிருகத்தனமாக கொலை செய்துள்ளனர் என்றும் பாலு குறிப்பிட்டார். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழ்நாட்டின் விடுதலை போராட்ட வீரர்கள் வவுசி, வேலு நாச்சியார், குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை உள்ளிட்டோர் குறித்த அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில், பொது இடங்களுக்கு அவர்களின் பெயர்கள் சூட்டப்படுமா என்றும் டி.ஆர். பாலு எம்.பி., கேள்வி எழுப்பினார்.