நாடு எங்கே செல்கிறது?
அவுரங்கசீப் கல்லறையை இடிக்கவேண்டுமாம்!
நாக்பூர், மார்ச் 18 நாக்பூரில் உள்ள அவுரங்க சீப்பின் கல்லறையை அவர் முசுலிம் என்பதால், அவரது கல்லறையை இடிப்பதற்குச் சங் பரிவார்கள் கச்சையைக் கட்டி இறங்கியுள்ளனர். முதலமைச்சரே இதற்குத் தூண்டுகோலாக இருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர் உதயன்ராஜா போஸ்லே மகராட்டிராவின் அவமானச் சின்ன மான அவுரங்கசீப் கல்லறை அகற்றப்படுமா? என்று கேட்டார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் தேவந்திர பட்னாவிஸ் கண்டிப்பாக அகற்றப்படும் என்றார்.
காங்கிரஸ் அரசு கல்லறையை அகழாய்வு பாதுகாப்பு விதிமுறையின் கீழ் மாற்றிவிட்டது, ஆகவே அந்த விதிமுறைகளைத் தளர்த்தி கல்லறையை அகற்றுவோம் என்று கூறினார் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்.
மதவெறி ஊர்வலத்திற்கு அனுமதி
இந்த நிலையில் விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் நாக்பூரில் உள்ள அவுரங்க சீப் கல்லறையை இடிக்கவேண்டும் என்று கூறி, அதற்கு மக்களின் ஆதரவுப் பேரணி ஒன்றை நாக்பூரில் நடத்தினர். இந்தப் பேரணியில் கலவரம் வெடிக்கும் என்று தெரிந்துமே காவல்துறை இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பேரணி செல்ல அனுமதி கொடுத்தது,
இஸ்லாமியர்கள் உள்ள பகுதிகளுக்குச் சென்ற ஹிந்து அமைப்பினர் அவுரங்கசீப் உருவ பொம்மையோடு இஸ்லாமியர்களின் ‘புனித’ நூலிலிருந்து எழுதப்பட்ட வாசகம் அடங்கிய பட்டாடையையும் எரித்து இஸ்லாமியர்கள் குறித்து மோசமான வார்த்தைகளைப் பேசியதால் கலவரம் ஏற்பட்டது.
போராட்டம் வெடித்த பகுதிகளில் பதற்றத்தை தணிக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. முதலமைச்சரின் பேச்சு
மகாராட்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று (17.3.2025) மாநில அரசு சத்திரபதி சம்பாஜி நகரில் உள்ள அவுரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாக்கும் என்றும், ஆனால், முகலாய மன்னனின் புகழ்ச்சியை அனுமதிக்காது என்றும் கூறினார்.
மாநில சட்டமன்றத்தில் பேசிய பட்னாவிஸ், ‘‘நாங்கள் அவுரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாப்போம்; ஆனால், அவரையோ அல்லது அந்த இடத்தையோ புகழ்ச்சி செய்ய அனுமதிக்க மாட்டோம். சத்திரபதி சிவாஜி மகாராஜின் கோவில் புகழ்பெறும், அவுரங்கசீப்பின் கல்லறை அல்ல’’ என்றார்.
மகாராட்டிராவில் அவுரங்கசீப், மராத்தியர்களுடனான போர்களுக்காக நினைவு கூரப்படுகிறார். அவர்கள், அவரது விரிவாக்க ஆசைகளை எதிர்த்தனர். சிவாஜி மன்னனின் மகன் சம்பாஜி, அவரது உத்தரவின் பேரில் பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டார். “50 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தொல்லியல் ஆய்வு மய்யத்தால் அவுரங்கசீப்பின் கல்லறை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டதால், அதை நாம் பாதுகாக்க வேண்டியது வாய்ப்புக்கேடானது. அதன் விளைவாக, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பாக இது உள்ளது. அவுரங்கசீப், ஆயிரக்கணக்கான நமது மக்களைக் கொன்றார். ஆனால், நாம் அவரது கல்லறையைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. இருப்பினும், எவ்வித சூழ்நிலையிலும் அவுரங்கசீப்பின் கல்லறையை புகழ்ச்சி செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். அவுரங்கசீப்பை புகழும் எண்ணத்தை நான் நசுக்குவேன்’’ என்று முதலமைச்சர் பட்னாவிஸ் சட்டமன்றத்தில் கூறினார்.
குஜராத் கலவரம் நடைபெற்றதும் அரசு பின்னணியில்தானே!
ஒரு முதலமைச்சரே மதவெறியோடு இப்படிப் பேசினால், அதன் விளைவு விபரீதமாகும் என்று அஞ்சப்படுகிறது.
குஜராத் கலவரம் அரசுப் பின்னணி யில்தானே நடைபெற்றது என்பது நினைவிருக்கட்டும்.
ஒன்றிய பி.ஜே.பி. அரசும் கண்டும் காணாததும்போல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழக்கூடும்.
பாபர் மசூதியை இடித்து, அந்த இடத்தில் ராமன் கோவில் கட்டிய கட்சிதானே இந்திய ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரப்பீடத்தில் வீற்றிருக்கிறது.