வாசிங்டன், மார்ச் 17 கடந்த 9 மாதங்களாக விண்வெளி நிலையத்தில் தங்கி இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங் கனை சுனிதா வில்லியம்ஸ் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து வரும் 19-ஆம் தேதி பூமிக்கு திரும்புகிறார்.
பன்னாட்டு விண்வெளி நிலையம்
அமெரிக்காவின் போயிங் நிறுவனம், ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தை தயாரித்தது. புதிய ஸ்டார்லைனர் விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அய்எஸ்எஸ் நிலையத்துக்கு சென்றனர்.
இவர்கள் 10 நாட்கள் ஆய்வு செய்து விட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் ஆட்கள் இன்றி வெறுமையாக பூமிக்கு திரும்பியது.
புதிய வீரர்கள்
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம், இரு வீரர்களுடன் அய்எஸ்எஸ் நிலையத்துக்கு சென்றது. இந்த விண்கலம் மூலம் சுனிதா, பேரி வில்மோரை பூமிக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது.
தற்போது அய்எஸ்எஸ் நிலையத்தில் அமெரிக்காவை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர், நிக் ஹேக், டான் பெடிட், ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸி, இவான் வேக்னர், அலெக்சாண்டர் ஆகிய 7 பேர் தங்கியுள்ளனர்.
கடந்த 15.3.2025 அன்று அமெரிக் காவை சேர்ந்த ஆனி மெக்லைன், நிகோல் அயர்ஸ், ஜப்பானை சேர்ந்த டகுயா ஒனிஷி, ரஷ்யாவை சேர்ந்த கிரிஸ் பெஸ்கோஸ் ஆகியோர், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு (அய்எஸ்எஸ்) புறப்பட்டனர்.
இணைந்தது
அமெரிக்காவின் புளாரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மய்யத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட டிராகன் விண்கலம் நேற்று (16.3.2025) அய்எஸ்எஸ் நிலையத்தில் வெற்றிகரமாக இணைந்தது. பூமியில் இருந்து புதிதாக வந்த 4 விண்வெளி வீரர்களை, அய்எஸ்எஸ் நிலையத்தில் தங்கியிருக்கும் சுனிதா உள்ளிட்ட 7 வீரர்களும் ஆரத் தழுவி வரவேற்றனர். அடுத்த சில நாட்களில் புதிய வீரர்களிடம் பணிகளை ஒப்படைத்துவிட்டு 4 வீரர்கள், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்ப உள்ளனர்.
பூமிக்கு திரும்புவர்
இதுகுறித்து நாசா விண்வெளி அமைப்பு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மார்ச்
19-ஆம் தேதி அய்எஸ்எஸ் நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் அமெரிக்காவை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர், நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் பூமிக்கு திரும்ப உள்ளனர். வானிலையை பொறுத்து தேதி மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
உடல்நிலை சீராக ஓராண்டு ஆகும்
பன்னாட்டு விண்வெளி நிலையத் தில் 9 மாதங்களுக்கு மேலாக தங்கியி ருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் இதர வீரர்கள் பூமிக்கு திரும்பியதும் அவர்களுக்கு பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்படும்.
விண்வெளியில் தங்கியிருந்ததால் அவர்களின் எலும்புகள், தசைநார்கள் பலவீனம் அடைந்திருக்கும். அவர்களின் தோல், குழந்தைகளின் தோல் போன்று மிகவும் மென்மையாக மாறியிருக்கும். கண்பார்வை திறன் பாதிக்கப்பட்டு இருக்கும். கதிரியக்க பாதிப்பு காரணமாக செல்கள், ரத்த அணுக்களும் பாதிக்கப்பட்டிருக்கும்.
பூமிக்கு திரும்பியதும் அவர்களுக்கு தலைவலி, தலைசுற்றல், வாந்தி ஏற்படும். எலும்பு, தசைநார்கள் பலவீனம் அடைந்திருப்பதால் அவர்களால் தரையில் கால் ஊன்றி நடக்க முடியாது. சுமார் 3 மாதங்கள் முதல் ஓராண்டுக்கு பிறகே சுனிதா உள்ளிட்டோர் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள்.
சுனிதா வில்லியம்ஸின் ஊதியம்
நாசாவின் ஊதிய பட்டியலில் ஜிஎஸ்-15 கிரேடில் சுனிதா வில்லியம்ஸ் உள்ளார். இதன்படி அவருக்கு ஓராண்டில் ரூ.1.41 கோடி ஊதியம் வழங்கப்படுகிறது. பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் 9 மாதங்கள் தங்கிருந்ததற்காக ரூ.1.05 கோடி, இதர படிகள் வகையில் ரூ.1.06 கோடி அவருக்கு கிடைக்கும் என்று நாசா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களாக தங்கி இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் வரும் 19ஆம் தேதி பூமிக்கு திரும்புகிறார்

Leave a Comment