பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு அரசும், மேற்கு வங்க அரசும் மலைவாழ் பழங்குடியின மாணவர்கள் பயிலும் ஏகலைவன் உண்டு உறைவிடப் பள்ளிகளில் (Residential schools) தாய்மொழி வழியில் பயிற்றுவிப்பதற்கு ஒப்புதல் தெரிவித்து ஒன்றிய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன. ஆனால், ஒன்றிய அரசு வலியுறுத்திய, மத்திய கல்விப் பாடத் திட்டத்திற்கு (Central Board of Secondary Education – CBSE) மாறிட மறுத்துவிட்டன. மத்திய கல்விப் பாடத் திட்டத்தின்படி மும்மொழிக் கொள்கையே நடைமுறையில் உள்ளது.
மலைவாழ் பழங்குடி மாணவர்கள் கல்வி பயில (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை) ஏகலைவன் உண்டு உறைவிடப் பள்ளிகளை ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. இந்தப் பள்ளிகள் மாநில அரசின் பாடத் திட்டத்தின்படியும், பயிற்று மொழியாக மாநில மொழியிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
ஒன்றிய அரசு வலியுறுத்தி வரும் ஹிந்தி மொழித் திணிப்பினைத் தொடர்ந்து எதிர்த்து வரும் தமிழ்நாடு அரசும், மேற்கு வங்க மாநில அரசம் ஏகலைவன் உண்டு உறைவிடப் பள்ளிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நடைமுறை மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்திட மறுத்துவிட்டன. நடைமுறை மாற்றங்களுள் ஒன்றான மத்திய கல்விப் பாடத்திட்டத்திற்கு மாறிட மறுத்துவிட்டன.
ஏகலைவன் உண்டு உறைவிடப் பள்ளிகள் 1997-1998 நிதி ஆண்டில், தொலைதூர மலைவாழ் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் தொடங்கப்பட்டன. மாநில அரசுகளும் ஒப்புதல் அளித்து அந்தப் பள்ளிகளை நடத்தி வந்தன. இந்த நிலையில் ஒன்றிய அரசின் 2018–2019ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி, மோடி தலைமையிலான அரசு, ஏகலைவன் உண்டு உறைவிடப் பள்ளியில் சில மாற்றங்களை அறிவித்து, அந்தப் பள்ளிகளின் செயல்பாட்டைத் தனது கூடுதல் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்தது.
மேலும் நிதிநிலை அறிக்கையில், 2022ஆம் ஆண்டுக்குள் 60 விழுக்காடு அளவிற்கு மலைவாழ் பழங்குடி மக்கள் வசிக்கும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் – குறைந்த பட்சம் 20,000 பழங்குடி மக்கள் இருந்தால் ஒரு ஏகலைவன் உள்ளுறைப் பள்ளியை உருவாக்கிட அறிவிக்கப்பட்டது.
மேலும், இந்தப் பணிக்காக மலைவாழ் பழங்குடி மாணவர்களுக்கான தேசியக் கல்விக் கழகத்தை நிறுவி, புதிய பள்ளிகளையும், அதற்குண்டான ஆசிரியர்களைத் தெரிந்தெடுத்து அயல் பணிக்கு அனுப்பிட போட்டித் தேர்வுகளையும் நடத்திட திட்டமிட்டிருந்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மாநில அரசுகளுடன் மேற்கொள்ளும் முயற்சியில் ஒன்றிய அரசு முனைந்தது.
ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.20 கோடியும், ஒவ்வொரு மாணவருக்கு ரூ.1 லட்சமும் மாநில அரசுக்கு அளித்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் கூறியது. ஆனால், இத்தனை வளர்ச்சிக் கூறுகளை உள்ளடக்கி இருந்தாலும் மாநில அரசுகள் மத்திய கல்வி பாடத் திட்டத்தினை அப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மத்திய மேல்நிலைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் ஹிந்தித் திணிப்பை உள்ளடக்கிய மும்மொழிக் கொள்கை நடைமுறைக்கு வலியுறுத்தப்பட்டது. இந்த மொழித் திணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு, மேற்கு வங்க அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட மறுத்துவிட்டன. நிதியைக் காட்டி மொழித் திணிப்பு எதிர்க்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
இதே போலத்தான் ‘தரமான’ கல்வியினை வழங்குவதாகக் கூறி ‘நவோதயா’ பள்ளிகளிலும் மொழிப் பாடத் திட்டத்துடன் ஒன்றிய அரசு முன்னர் அறிவித்திருந்தது. மொழித் திணிப்புக் காரணமாக நவோதயா பள்ளிகளைத் தொடங்கிட தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டது.
இப்பொழுது ஏகலைவன் உள்ளுறைப் பள்ளிகளின் மூலம் ஹிந்தி திணிப்புக்கு நிதியைக் காட்டி ஒன்றிய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதே போலத்தான் ஹிந்தித் திணிப்பிற்குத் துணைபோகும் தேசிய கல்வித் திட்டம் 2020இன்படி, ஹிந்தியை ஏற்றுக் கொண்டால்தான் பள்ளிக் கல்விக்கான நிதியைமாநில அரசுக்கு ஒதுக்கிட முடீயும் என்று ஒன்றிய அரசானது அரசமைப்புச் சட்ட விதிகளுக்குப் புறம்பாக அடம் பிடித்து வருகிறது. மக்களிடம் பெற்ற வரிப்பணம் மக்களின் கல்வி வளர்ச்சிக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நியாய நிலைக்கு மாறாக ஹிந்தி மொழித் திணிப்பை அடிப்படையாகக் கொண்டு நிதி வழங்குவதை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு நிலை நிறுத்திட துடித்து வருகிறது.
– வீ.குமரேசன்