சென்னை, மார்ச் 16- கோடையில் குடிநீர் தேவை அதிகரிக்கும் என்பதால் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடும்படி ஆந்திர மாநில அரசுக்கு தமிழ்நாடு அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
கிருஷ்ணா நதிநீர்
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்ததால் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின. அனைத்து ஏரிகளிலும் போதுமான தண்ணீர் இருந்ததால் ஜனவரி மாதம் பெற வேண்டிய கிருஷ்ணா தண்ணீரை திறக்க வேண்டாம் என்று தமிழ்நாடு அதிகாரிகள், ஆந்திர அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
குடிநீர் தேவை அதிகரிக்கும்
தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும்போது சென்னையில் குடிநீர் தேவை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து கிருஷ்ணா நதிநீர் பங்கீடு ஒப்பந்தபடி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை அடுத்த மாதம் ஏப்ரல் மத்தியில் திறந்து விடவேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆந்திர மாநில அரசுக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர். எனவே அடுத்த மாதம் இறுதியில் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகளில் தற்போது மொத்த கொள்ளளவான 13.222 டி.எம்.சி.யில் 10.116 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இது 76.5 சதவீதமாகும். கடந்த ஆண்டு இதே நாளில் 8.572 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணா நதிநீரை திறந்துவிட ஆந்திர அரசுக்கு, தமிழ்நாடு அதிகாரிகள் கடிதம்

Leave a Comment