அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
சென்னை, மார்ச் 16- மும்மொழிக் கொள்கையை கொண்டு ஒன்றிய அரசின் முயற்சியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறியடிப்பார் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு பரிசு
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிறைவையொட்டி போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று, 37 மாவட்டங்களைச் சேர்ந்த 565 பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் களை வழங்கினார்.
மேலும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் பணி யாற்றி உயிரிழந்த 18 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப் படையில் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், உயர் கல்வித் துறை அமைச்சர்
கோவி.செழியன் பேசியதாவது:-
திருவள்ளுவர் அனை வருக்கும் பொதுவானவர். திருவள்ளுவருக்கு சாயம் பூச நினைக்கிற தீயவர் களை விரட்டியடிக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.
தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் புதிய இணையதளத்தில் மாணவர்களுக்கான இணையவழி சேவைகள் புதிதாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவர்கள் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சரிபார்ப்பு, இடம்பெயர்தல் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை அறிந்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை
மேலும், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பாடங்களை எளிதாகப் புரிந்து கொள்ளவும், தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தவும் உதவிடும் வகையில், பாட வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட ஒரு சிறப்பு காணொலி தொடர் வெளியிடப்பட்டுள்ளது.
இது தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிகளிலும் மாணவர்களுக்கு விளக்கப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே உயர்கல்வியில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.
தேசிய கல்விக்கொள்கை. மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் 3, 5 மற்றும் 8ஆம் வகுப்புக்கும் மற்றும் இளங்கலை பட்டப் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு மீண்டும் கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது.
கல்வியை ஒரு சாரார்க்கு மட்டுமே கொண்டு சேர்க்க முயற்சி செய்கிறது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறியடிப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை செயலாளர் சமயமூர்த்தி, தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையர் இன்னசென்ட் திவ்யா, அண்ணா பல்கலைக்கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் உஷா, பதிவாளர் பிரகாஷ் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.