பெங்களூரு, மார்ச் 16- கருநாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கருநாடக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று (15.3.2025) நடைபெற்றது. இதில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஒப்பந்த பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதை போல, முஸ்லிம்களுக்கு 2பி பிரிவில் ரூ.1 கோடி வரையிலான ஒப்பந்த பணிகளில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பாஜக எதிர்ப்பு
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “தனித் தொகுதி, தனி பல்கலைக்கழகம் ஆகியவை நாட்டில் பிரிவினைக்கு வழிவகுத்திருக்கின்றன. அதுபோல மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது பிரிவினையை அதிகரிக்கும். வாக்கு வங்கியை மனதில் வைத்து காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.
ராகுல் காந்தியின் விருப்பப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது. சட்டத்தையும் மக்களின் வரிப்பணத்தையும் காங்கிரஸ் தவறாக பயன்படுத்துகிறது. நாட்டின் பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது” என்றார்.
பெங்களூரு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கூறுகையில், “தேர்தல் அரசியலுக்காக காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கருநாடக அரசின் இந்த முடிவு மத மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அரசின் அதிகாரத்தையும், பொது வளங்களையும் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் தவறாகப் பயன்படுத்துகிறது. நாட்டின் பொருளாதாரத்தை அரசியல் தேவைக்காக விளையாட்டு மைதானமாக காங்கிரஸ் மாற்றிவிட்டது” என்றார்.
கருநாடக அரசு விளக்கம்
இதற்கு கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், “கருநாடக அரசின் முடிவை எதிர்க்கட்சியினர் மடை மாற்றுகின்றனர். இந்த இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்கப் படவில்லை. ஒப்பந்த பணிகளில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டதைப் போல மத சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து சிறுபான்மையினரும் பலன் அடைவார்கள்” என விளக்கம் அளித்துள்ளார்.
தட்கல் டிக்கெட் தெரியும், ப்ரீமியம் தட்கல் தெரியுமா?
ரயில்களில் அவசரகால பயணத்திற்கு தட்கல் டிக்கெட் முறை அமலில் உள்ளது. இதேபோல், ரயில்வேயில் ப்ரீமியம் தட்கல் டிக்கெட் முறையும் செயல்பாட்டில் இருக்கிறது. அதாவது, தட்கல் டிக்கெட்டில் 30 சதவீதம் தற்போது ப்ரீமியம் தட்கல் டிக்கெட்டுக்கு செல்கிறது. இந்த டிக்கெட் கட்டணம், பேஸ் கட்டணத்தை விட 30 சதவீதம் அதிகம். அதேபோல், தேவைக்கு ஏற்ப விமான கட்டணம் உயர்வது போல இதுவும் அதிகரிக்கும். இதை ரத்து செய்ய முடியாது.
பேங்க் ஆப் பரோடாவில் வேலை.. மார்ச் 21 வரை நீடிப்பு
பேங்க் ஆப் பரோடாவில் காலியாக உள்ள 518 ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த 11ஆம் தேதியுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த அவகாசம் வருகிற 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வேலையில் சேர விரும்புவோர், இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.