* கல்லூரிகளில் 19% கூடுதல் மாணவியர் சேர்ப்பு! 8 சுயமரியாதை காக்கும் திட்டங்கள்!
* உலக நாடுகளில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சிகள் – பண்பாட்டு அருங்காட்சியகங்கள்!
* கல்வி, அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்!
முதலமைச்சருக்கும், நிதியமைச்சருக்கும் நமது பாராட்டுகள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
கல்லூரிகளில் 19% கூடுதல் மாணவியர் சேர்ப்பு! உலக நாடுகளில் தமிழ்ப் பத்தகக் கண்காட்சிகள் – பண்பாட்டு அருங்காட்சியகங்கள்! கல்வி, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்! அடுத்தடுத்த தலைமுறைகளை உருவாக்கும் தொலைநோக்கு நிதிநிலை அறிக்கை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்குவதற்குத் தனி முனைப்பெடுத்து ஒன்றிய அரசு செயல்பட்டு வரும் சூழலில், 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்று (14.03.2025) தமிழ்நாடு சட்டப் பேரவையில் முன்வைத்துள்ளார் மாண்புமிகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள். ஆஸ்திரேலியாவில் இருந்தபடி, தொலைக்காட்சி நேரலை மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் நிதிநிலை அறிக்கை படித்ததை முழுமை யாகக் கண்டோம்.
‘திராவிட மாடல்’ அரசின் நிதிநிலை அறிக்கை!
சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் சூழலில், அடுத்த தேர்தலைப் பற்றி கவலைப்படும் குறுகிய நோக்கம் இல்லாமல், அடுத்த தலைமுறையை வலுவானதாக உருவாக்கும் தொலைநோக்கோடு, பிற மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசுக்கும் வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசின் நிதிநிலை அறிக்கை!
‘‘எல்லார்க்கும் எல்லாம்’’ என்பதையே இலக்காகக் கொண்டு தி.மு.க. அரசு செயல்பட்டுவருவதை இந் நிதிநிலை அறிக்கை தெள்ளிதின் எடுத்துக்காட்டுகிறது.
சமூகநீதி, பாலியல் நீதி, கல்வி வளர்ச்சி, மாநில உரிமை, பொருளாதார மேம்பாடு, அனைத்துத் தரப்பினருக்குமான முன்னேற்றம், அனைத்துப் பகுதிகளுக்குமான பரவலான– ஒருங்கிணைந்த வளர்ச்சி, உள்கட்டமைப்பு, வளரும் தொழில்நுட்பத்திற்கும், உலகப் போட்டிக்கும் ஈடுகொடுக்கும் வகையிலான தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் என்று சரியான பாதையில் திட்டமிட்டு இந் நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
அடுக்கடுக்கான திட்டங்கள் வெற்று அறிவிப்புகளாக இல்லாமல், செயல்பாட்டுக்கான திட்டங்களோடு முன்வைக்கப்பட்டுள்ளன.
விடியல் பயணம் திட்டம் மூலம், சராசரியாக ரூ.888 சேமிக்கும் பெண்கள்!
திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்த பல திட்டங்கள், அறிவிக்கப்பட்ட காலத்தில் நடைமுறைச் சாத்தியம் உள்ளவையா என்று கேள்வி எழுப்பட்டவை தான். ஆனால், அதைச் செய்து காட்டியது தான் அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் காலம் முதல் இன்றைய முதலமைச்சர் காலம் வரை தி.மு.க.வின் சாதனையாகும்!
மகளிருக்கான விடியல் பயணம் திட்டம் மூலம், சராசரியாக பெண்கள் மாதம் ரூ.888 சேமிக்க முடிகிறது என்ற செய்தி, ஏழை எளிய குடும்பங்களுக்கு இத் திட்டம் எந்த அளவில் பேருதவி செய்யக் கூடியது என்பதற்கான சான்றாகும்.
இமாலயச் சாதனை அல்லவா?
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் கல்லூரியில் பயில மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தின் வெற்றி, கடந்த ஆண்டில் கல்லூரியில் சேர்ந்த பெண்களின் எண்ணிக்கை 19%, அதாவது 40,276 பேர் அதற்கு முந்தைய ஆண்டைவிடக் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர் என்பதன் மூலம் விளங்கும். இது இமாலயச் சாதனை அல்லவா? இது நிகழ்த்தப் போகும் சமூக மாற்றத்தை நம்மால் உடனடியாக அளவிட இயலுமா?
சொத்துரிமை வழங்கி மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளராகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில், பெண்கள் பெயரில் பதியப்படும் ரூ.10 லட்சத்துக்கும் குறைந்த மதிப்புடைய சொத்துகளுக்கு 1% வரி தள்ளுபடி என்பது பெண்களையே பொருள்க ளாகப் பார்த்த மனுதர்மத்துக்கும், ஸநாதனத்துக்கும் வெட்டப்படும் சவக்குழி அல்லவா?
புதிய சிகரங்களை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் செயல்திட்டங்கள்!
இந்தியாவின் உற்பத்தித் துறையில் உள்ள பெண்களில் 42% பெண்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தோர் (2021-2022) என்ற கணக்கும், 44% தமிழ்நாட்டுப் பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கான கடன் பெற்று அதில் முன்னிலையில் உள்ளனர் என்ற நிதி ஆயோக் 2024 டிசம்பரில் வெளியிட்ட தகவலும் தமிழ்நாட்டுப் பெண்களின் பொருளாதாரத் தற்சார்பை எடுத்துக்காட்டும் தரவுகளாகும். அதற்கேற்ப மேலும் 10 இடங்களில் தோழி மகளிர் விடுதி, உயர்கல்விக்கான மூன்று மாணவியர் விடுதி ஆகியன புதிய சிகரங்களை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் செயல்திட்டங்களாகும்.
சுயமரியாதைக்கான அரசு!
மூன்றாம் பாலின மாணவர்களுக்கும் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் போல ரூ.1000 மாதந்தோறும் கல்லூரிக் கல்விக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பும், அவர்களுக்கு மரியாதையான எதிர்காலம் அமைய ஊர்க்காவல் படை போன்று அமைக்கும் புதிய முயற்சியும், மாற்றுத் திறனாளிகளைப் பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டமும், மூத்த குடிமக்களுக்கான அன்புச் சோலை இல்லங்களும், இணையம் சார்ந்த சேவைப் பணித் தொழிலாளர்களுக்கான மானியமும், காப்பீடும் எல்லா திசைகளையும் நோக்கி, எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வழிவகுக்கும் மனிதநேயம் மிக்க, சமூகநீதி அரசு என்பதுடன், அனைவரின் சுயமரியாதையையும் காக்கும் அரசு என்பதற்கான எடுத்துக்காட்டுகளாகும்.
நமது வேண்டுகோள்களில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படுத்தப்பட்டிருப்பதும், தொலைதூர மலைப் பகுதி மாணவர்கள் பயன்பெற வசதியாக அந்தந்த பகுதிகளிலேயே 14 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டி ருப்பதும் பாராட்டுக்குரியவைகளாகும்.
அறிவு வளர்ச்சிக்கான முதலீடுகளே!
நூலகங்கள், உயர்கல்வி உதவித் தொகைகள், செயற்கை நுண்ணறிவு, உயிர்த் தொழில்நுட்பங்க ளுக்கான புதிய கல்வி வாய்ப்புகள், அரசுக் கல்லூரி இடங்கள் அதிகரிப்பு, 20 இலட்சம் மாணவர்களுக்கு கைக்கணினி அல்லது மடிக்கணினி, வளர்ந்துவரும் நகரங்களில் 10 புதிய அரசுக் கல்லூரிகள், தொழில் ஆராய்ச்சி நிதிகள், செமி கண்டெக்டர் உற்பத்திக்கான இயந்திரத் தொழிற் பூங்காக்கள், சிங்கப்பூர் அறிவியல் மய்யத்துடன் இணைந்து சென்னை அறிவியல் மய்யம், அறிவியல், கணித ஆராய்ச்சி மய்யங்கள், விருதுநகரில் மினி டைடல் பூங்கா, 30 இடங்களில் முதல்வர் படைப்பகம் என்று முழுக்க முழுக்க அறிவு வளர்ச்சிக்கான முதலீடுகளே இத் திட்டங்கள் அனைத்தும்!
சாதனைப் படிக்கட்டுகளில் தமிழ்நாட்டை மேலேற்றும் திட்டங்கள்!
குடிசையில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்திற்கு ரூ.3500 கோடி ஒதுக்கீடு, விளிம்பு நிலை மக்களுக்காகக் கட்டித் தரப்பட்டு பழுதடைந்த பழைய வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்ட ரூ.600 கோடி ஒதுக்கீடு, அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ஆகியன சாதனைப் படிக்கட்டுகளில் மேலே மேலே தமிழ்நாட்டைக் கொண்டு செல்லும் திட்டங்களாகும்.
நதிக்கரை மேம்பாடு, அடையாறு நதி மீட்பு, ஸ்பாஞ்ச் பூங்காக்கள், கழிவு மேலாண்மை, பல்வேறு மாவட்டங்களுக்கும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள், சென்னையின் நெருக்கடியைக் குறைக்க 2000 ஏக்கரில் புதிய நகரம் (Global City), இராமேசுவரத்தில் விமான நிலையம், தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்திக் கொள்கை, மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பு (RRTS) என நீளும் திட்டங்கள் அனைத்தும் எத்தகைய தொலைநோக்குடையவை என்பதை அனைவரும் அறிவர்.
தமிழ்நாட்டு அரசு, தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கானதாக மட்டுமல்லாமல், உலகெங்கும் வாழும் தமிழர்களைக் கவனத்தில் கொண்டு செயலாற்றுவதைப் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் அறியமுடியும். தமிழர்கள் அதிகம் வசிக்கும் புதுடில்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, திருவனந்தபுரம், அயல்நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளிலும் தமிழ்ப் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பு, நாட்டுப்புறக் கலை களை அயல்நாடுகளில் பயிற்றுவிக்கும் முயற்சி, உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி போன்றவை பண்பாட்டு – அறிவுத் தளத்தில் இவ்வாட்சியின் ஆர்வத்தை எடுத்துக்காட்டுகின்றன.
திருக்குறளை அனைத்து மொழிகளிலும் கொண்டு செல்லும் நோக்கில் மேலும் 45 மொழிகளில் மொழி பெயர்ப்புக்கான நிதி.
திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியான தமிழின் சிறப்பையும், பிற மொழிகளுடனான உறவையும் எடுத்துக்காட்டவிருக்கும் அகரம் – மொழிகளின் அருங்காட்சியகம், கடல்கொண்ட தமிழர் நிலத்தில் ஆழ்கடல் அகழாய்வு, நொய்யல் அருங்காட்சியகம், நாவாய் அருங்காட்சியம் ஆகிய வற்றுடன், திராவிட நாகரிகமாம் சிந்துவெளியின் சிறப்பை எடுத்துக்காட்ட ‘சிந்துவெளி பண்பாட்டு அரங்கம்’, மாமல்லபுரம், திருவண்ணாமலையில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகங்கள் தமிழர் – திராவிடர் பண்பாட்டு-வரலாற்றுச் சிறப்புகளையும் இளைய தலைமுறைக்கும், பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கும் எடுத்துக்காட்டுவனவாக அமையும்.
தடை தாண்டித் தடம் பதிக்கும் தமிழ்நாடு அரசு!
இவையனைத்தும் ஒன்றிய அரசு தரும் நிதி நெருக்கடிகளுக்கும், நிர்வாக நெருக்கடிகளுக்கும் மத்தியில் திட்டமிடப்பட்டிருப்பவையாகும். தமிழ்நாடு அரசுக்குச் சேர வேண்டிய வரிப் பகிர்வைக் குறைத்து, தாமதமாக வழங்குகிறது; கல்விக்கான நிதியை வழங்கவே மறுக்கிறது; மானியங்களைக் குறைக்கிறது ஒன்றிய பாஜக அரசு! இவையெல்லாம் தமிழ்நாட்டின் நிதிநிலையைக் கடுமையாகப் பாதிப்பவையாகும்.
ஆனாலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் தடையோட்ட (Hurdle Race) வீரரைப் போல திறம்பட இந்தத் தடைகளைத் தாண்டி தடம் பதித்துக் கொண்டிருக்கிறார். அநாவசியத் தடைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசு, அவற்றை அகற்றிவிட்டு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு மாறாக நடந்துகொள்வதை நிறுத்த வேண்டும். அது ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கும் வழிகாட்டுவதாக அமையும் என்பதை இந்த நேரத்தில் மீண்டும் வலியுறுத்துவது நம் கடமையாகும்.
“வடக்கினில் தமிழர் வாழ்வை
வதக்கிப்,பின் தெற்கில் வந்தே
இடக்கினைச் செயநினைத்த
எதிரியை, அந்நாள் தொட்டே
‘‘அடக்கடா’’ என்றுரைத்த
அறங்காக்கும் தமிழே! இங்குத்
தடைக்கற்கள் உண்டென்றாலும்
தடந்தோளுண்டெனச் சிரித்தாய்!” என்று புரட்சிக் கவிஞர் சொன்னதைப் போல தடந்தோளுண்டெனச் சிரிக்கும் தகத்தகாய ஒளிப் பிழம்பாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் இன, மொழி, மாநில உரிமைகளுக்காக நடத்திவரும் போரின் வெற்றிக்குக் கட்டியம் கூறும் தொலைநோக்கு நிதிநிலை அறிக்கை இது!
உரிமைப் போர் வெல்லட்டும்!
தளராத ஊக்கம் வெல்லட்டும்!
தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கும், நிதி அமைச்ச ருக்கும் நமது பாராட்டுகள்! பாராட்டுகள்!!
கி.வீரமணி
முகாம்: சிட்னி, ஆஸ்திரேலியா
தலைவர்
திராவிடர் கழகம்
15.3.2025