மதுரை, மார்ச் 14 தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற எந்த முகாந்திரமும் இல்லை என திருமாவளவன் கூறினார்.
நெல்லையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி விமானம் மூலம் மதுரை சென்றார். அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“திமுகவை ஆட்சியிலிருந்து விரட்ட யாருடனும் கூட்டணி வைப்போம் என எடப்பாடி பழனிச்சாமி கூறுவது, அவருடைய விருப்பம். கடந்த நான்கு ஆண்டுகள் ஆட்சியில், எண்ணற்ற நலத்திட்டங்களை திமுக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. திமுக கூட்டணிக்கு பொது மக்களின் ஏகோபித்த ஆதரவு வழக்கம்போல கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆட்சியில் விசிகவுக்கும் பங்கு என சொல்லக் கூடாது என்பது இல்லை. சொல்லக்கூடிய நேரத்தில் சூழலை பொறுத்து கோரிக்கை வைப்போம். எங்களைப் பொறுத்தவரையில் கட்சி, நாட்டு நலனை கருத்தில் கொண்டு தான் முடிவெடுத்தோம். இனிமேலும் முடிவெடுப்போம். எங்களது கட்சியை மக்கள் முழுமையாக ஏற்கும் காலம் வரும். இதைக் கணித்து எல்லாம் சொல்ல முடியாது. மாநில கட்சியாக மக்கள் அங்கீகரித்து இருக்கின்றனர். ஓர் அதிகார வலிமை உள்ள கட்சியாக அங்கீகரிக்கப்படும்.
வட இந்தியாவில் இருந்து வரும் அமைச்சர்கள் ஆங்கிலத்தில் பேசுவது கிடையாது. நாம் ஆங்கிலத்தில் பேசினாலும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஒரு மொழி கொள்கையையான ஹிந்தி பேசக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை கொண்டு வர முயற்சிக்கின்றனர்.
ஹிந்தியை பேச வேண்டும் என்பதற்காகவே ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என அவர்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. ஹிந்தியை யார் வேண்டுமானாலும் சொல்லிக் கொடுக்கட்டும். பிற பள்ளிகளில் ஹிந்தி கற்றுக் கொடுப்பதை யாரும் எதிர்க்கவில்லை. ஹிந்தியை திணிப்பதை எதிர்க்கிறோம்.
கூட்டணியை பொறுத்தவரை பலமுறை கூறி விட்டேன் தி.மு.க.விடம் இருந்து வெளியேற எந்த முகாந்திரமும் இல்லை என திருமாவளவன் கூறினார்.