கருநாடகா சார்பில் துணை முதலமைச்சர் பங்கேற்பு
அய்தராபாத், மார்ச் 14 சென்னையில் மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத் தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கருநாடக சார்பில் துணை முதலமைச்சர் சிவகுமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
தொகுதி மறுசீரமைப்பு
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மார்ச் 22-ஆம் தேதி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி 5 மாநில முதலமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர்களுக்கு கடிதமும் எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து திமுக எம்.பிக்கள், தமிழ்நாடு அமைச்சர்கள் சம்மந்தப்பட்ட முதலமைச்சர்களைச் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதங்களை நேரில் வழங்கி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகின்றனர்.
அதன்படி, தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு, என்.ஆர். இளங்கோ ஆகியோர் தெலங்கானா முதலமைச்சரைச் சந்தித்து, கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனர். அப்போது திமுக எம்.பி.க்கள் கனி மொழி, ஆ.ராசா, அருண் நேரு, கலாநிதி வீராசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர் களிடம் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறுகையில், “தொகுதி மறுசீரமைப்பு என்பதை தென்மாநிலங்களுக்கு வரம்புகளை நிர்ணயிப்பதாகவே இருக்கும். அது தொகுதி மறுசீரமைப்பு இல்லை. தென்மாநிலங்களுக்கான தொகுதிகள் குறைப்பு. எந்தச் சூழ்நிலையிலும் இந்தத் தொகுதி மறுசீரமைப்பை தென் மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
வடக்கு மாநிலங்களை விட நாங்கள் அதிகம் வரி செலுத்துகிறோம். நம்மிடம் அதிகமான தொழில்முனைவோர் உள்ளனர். நாட்டுக்கு நாம் அனைத் தையும் வழங்குகிறோம். கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கருநாடகா மக்கள் பாஜகவைத் தோற்கடித்தனர். ஆந்திராவிலும் அவர்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. அதனால் அவர்கள் (பாஜக) தென்மாநில மக்களுடன் கணக்கு தீர்க்க விரும்புகின்றனர். இது ஓர் அரசியல் பழிவாங்கல்.
கலந்து கொள்வேன்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் இந்தச் சதிகளுக்கு எதிராக விவாதம் நடத்த ஒரு முன்னெடுப்பை துவக்கியுள்ளார். அதற்காக ஒரு கூட்டத்தை ஒருங்கிணைத்துள்ளார். காங்கிரஸ் கட்சி கொள்கையளவில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடிவெடுத்துள்ளது. நான் கட்சி உயர் மட்டத்தில் அனுமதி பெற வேண்டும். அதன் பின்பு நிச்சயம் கூட்டத்தில் கலந்துகொள்வேன்” என்று தெரிவித்தார்.
சிவகுமார்
இந்நிலையில், சென்னையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கருநாடகா சார்பில் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கலந்துகொள்வார் என்று முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கருநாடக முதலமைச் சர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “மாநில சுயாட்சி மற்றும் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதம் எனக்குக் கிடைத்தது. மார்ச் 22 அன்று நான் வேறு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால், அனைத்துக் கட்சி கூட்டத்தில் கருநாடகா சார்பில் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கலந்துகொள்வார். கூட்டாட்சி கொள்கைகள் மற்றும் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.