ஆட்டு இறைச்சி கடையிலும் மதவாதம்
பிஜேபி அரசின் இந்துத்துவா இதுதான்
மும்பை, மார்ச் 12 மகாராட்டிர மீன்வளம் மற்றும் துறைமுக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நிதேஷ் ராணே, ஆட்டிறைச்சி கடைகளுக்கு மல்ஹர் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ராணே கூறியதாவது: மகாராட்டிராவில் உள்ள இந்து சமுதாயத்தினருக்காக முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முற்றிலும் இந்துக்களால் நடத்தப்படும் சரியான ஆட்டிறைச்சி கடைகளை அடையாளம் காண ‘மல்ஹர்’ சான்றிதழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இறைச்சியில் கலப்படம் இல்லை என்பதை உறுதி செய்யவும் இது உதவும்.
இந்துக்கள் மல்ஹர் சான்றிதழ் பெற்ற கடையில் ஆட்டிறைச்சி வாங்க வேண்டும். இந்த சான்றிதழ் பெறப்படாத கடையில் ஆட்டிறைச்சி வாங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும் இந்த முயற்சி இந்து சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையவும் உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இசுலாமியர்கள், தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கடைகளில் ‘ஹலால்’ சான்றிதழ் பெற்ற இறைச்சியை மட்டுமே வாங்குகின்றனர். சில மாநிலங்களில் இந்த ஹலால் இறைச்சிக்கு எதிராக வலதுசாரி அமைப்புகள் பிரச்சாரம் மேற்கொண்டன. இந்நிலையில்தான் இந்துக்களுக்காக மல்ஹர் சான்றிதழ் பெற்ற இறைச்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதான் இந்தியா
உலகில் மாசுபட்ட நாடுகள்
பட்டியலில் இந்தியா 5ஆவது இடம்
புதுடில்லி, மார்ச் 12 ஸ்டெய்னாச் (சுவிட்சர்லாந்து): உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5ஆவது இடத்தை பிடித்துள்ளது. உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் புதுடில்லி முதலிடம் பிடித்துள்ளது.
சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir இன் உலக காற்று தர அறிக்கை 2024 வெளியாகி இருக்கிறது. அதன்படி, உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 நாடுகளாக சாட், வங்கதேசம், பாகிஸ்தான், காங்கோ, இந்தியா ஆகியவை உள்ளன. உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளன.
அசாமில் உள்ள பைர்னிஹாட், டில்லி, பஞ்சாபில் உள்ள முல்லன்பூர், ஃபரிதாபாத், லோனி, புதுடில்லி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாபர்நகர், ஹனுமன்கர், நொய்டா ஆகிய 13 நகரங்கள் அதிக மாசுபட்ட நகரங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அசாமின் பைர்னிஹாட் நகரம் உலகின் மாசுபட்ட நகரங்களில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், உலகில் மாசுபட்ட தலைநகரங்களில் புதுடில்லி முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில், உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் 2023-இல் 3ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2024இல் 5-ஆவது இடத்திற்குச் சென்றுள்ளது.