கோவை, மார்ச் 12- ஒன்றிய அரசு வேலைக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில், வட மாநிலங்களைச் சேர்ந்த 8 இளைஞர்களை கோவை சாய்பாபாகாலனி காவல் துறையினர் கைது செய்தனர்.
எழுத்துத் தேர்வு
கோவை மேட்டுப்பாளையம் சாலையில், வடகோவை அருகே ஒன்றிய அரசின் வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனத்தில், வனத் துறையினருக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு இயங்கும் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் இயக்குநர் குன்ஹி கண்ணன் என்பவர் கோவை சாய்பாபாகாலனி காவல் துறையினரிடம் நேற்று முன்தினம் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
எங்கள் நிறுவனம் சார்பில், மல்டி டாஸ்கிங் ஸ்டாப்ஸ் (எம்.டி.எஸ்.) மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்துக்கு கடந்த மாதம் 8, 9ஆம் தேதிகளில் எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டன. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தேர்வு எழுதினர். தொடர்ந்து, விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் தேர்வு எழுதியவர்கள் பட்டியலிடப்பட்டனர்.
ஆள் மாறாட்டம்
ஆவண சரிபார்ப்புக்காக அவர்கள் நேற்று முன்தினம் ஆஜராகுமாறு அறிவுறுத்தப் பட்டிருந்தது. அதில், எம்.டி.எஸ். பதவிக்கான ஆவண சரி பார்ப்பின் போது, அதற்காக வந்தவர்களின் ஒளிப்படங்கள் மற்றும் தேர்வு எழுதும்போது பெறப்பட்ட கைரேகைகள் ஆய்வு செய்யப்பட்டன.
கைரேகை பொருந்தவில்லை
அதில், தேர்ச்சி பெற்ற 8 இளைஞர்களின் கைரேகைகள் பொருந்தவில்லை. அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, தேர்வு நடந்த போது வந்திருந்தவர்களிடம் பெறப்பட்ட கைரேகைகள் மற்றும் அப்போது எடுக்கப்பட்ட காட்சிப் (வீடியோ) பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், மேற்கண்ட 8 பேரும் எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்றும், ஆள் மாறாட்டம் மூலம் வேறு நபர்கள் இவர்களுக்கான தேர்வுகளை எழுதியதும் தெரியவந்தது.
உத்தரப்பிரதேசம், பீகார்
இதில் தொடர்புடைய உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிஷிகுமார்(26), நரேந்திரகுமார்(24), பிபன்குமார்(26), பிரசாந்த்குமார்(26), லோகேஷ் மீனா(24), அசோக்குமார் மீனா(26), ஹரியானாவைச் சேர்ந்த ஷிபம்(26), பீகாரைச் சேர்ந்த ராஜன்குமார்(21) ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
8 பேர் கைது
இதன்பேரில் சாய்பாபாகாலனி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து, 8 பேரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தொடர்ந்து, அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.