தர்மேந்திர பிரதானுக்கு பதிலடி கொடுத்த கனிமொழி
சென்னை, மார்ச் 12 மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில், பிஎம் சிறீ பள்ளிகளை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிப்பதாக அனுப்பிய கடிதத்தை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அமைச்சரின் பதிவுக்கு, உண்மைகளை திரிப்பதை நிறுத்துங்கள் என்று அவருக்கு கனிமொழி எம்பி பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு அண்மையில் நடைபெற்றது. அப்போது, பி.எம்.சிறீ திட்டம் தொடர்பான கேள்விக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். அப்போது பேசிய அமைச்சர், தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் நாகரிகமற்றவர்கள் என குறிப்பிட்டதால் திமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, தனது வார்த்தையை திரும்ப பெற்றுக்கொள்வதாக கூறினார். பின்னர், அவைக் குறிப்பில் இருந்து அந்த சொல் நீக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அமைச்சரின் அவமரியாதை யான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, டில்லியில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநிலங்களவையில், தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்டார். தொடர்ந்து, மும்மொழி கொள்கைக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியதாக தமிழ்நாடு அரசின் கடிதத்தையும் அவையில் வாசித்தார். அந்த கடிதத்தை தனது சமூக வலைதளத்தில் அமைச்சர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த கடிதத்துக்கு திமுக எம்.பி.கனிமொழி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில், தமிழ்நாடு PM SHRI பள்ளிகளை மாநில அரசு தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே ஏற்றுக் கொள்ளும் என்றும், ஒன்றிய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் அல்ல என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கை அல்லது NEP-அய் முழுமையாக ஏற்றுக் கொள்வதாக நாங்கள் எங்குமே குறிப்பிடவில்லை. தமிழ்நாட்டிற்கு எது ஏற்றுக் கொள்ளத்தக்கதோ, அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். உண்மைகளைத் திரிப்பதை நிறுத் துங்கள் என்று தெரிவித்துள்ளார்.