சென்னை,மார்ச் 12- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தாட்கோ மூலம் கட்டணமின்றி வழங்கப்படும் உணவக மேலாண்மை (ஹோட்டல் மேனேஸ்மென்ட்) படிப்புகளில் சேர்ந்து பயில விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 10, 12ஆம் வகுப்பில் 45 சதவீத மொத்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்குள் இருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி நிறுவனத்தில், இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
அதன்படி தாட்கோ சார்பில் 12ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 3 ஆண்டு முழுநேர பட்டப்படிப்பான பிஎஸ்சி ஹோட்டல் நிர்வாகம், ஒன்றரை ஆண்டு முழுநேர பட்டயப்படிப்பான டிப்ளமோ உணவு தயாரிப்பு, அதேபோல் 10ஆம் வகுப்பு முடிந்த மாணவர்களுக்கு ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் ஆகிய படிப்புகள், சென்னை தரமணியில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி நிறுவனத்தில் வழங்கப்படுகின்றன.
இந்த படிப்புகளுக்கான செலவுகள் தாட்கோ மூலம் ஏற்கப்படும். படிப்புகளை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில், மாணவர்களின் திறமையின் அடிப்படையில் நட்சத்திர விடுதிகள், உயர்தர உணவகங்கள், விமானத்துறை, கப்பல்துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வழிவகை செய்யப்படும். அந்தவகையில் தரமணியில் உள்ள பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து இந்த படிப்புகளை பயில விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவுசெய்து பயனடையுமாறு ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசு நிவாரணத்தை உயர்த்தியதால்
மீனவர்களுக்கு விதிக்கப்படும்
அபராதத் தொகையை 5 மடங்கு உயர்த்தியது
இலங்கை அரசு அடாவடித்தனம்
ராமேசுவரம்,மார்ச் 12- இலங்கையில் கைதாகும் மீனவர்கள், படகிற்கு தமிழ்நாடு அரசு கூடுதல் நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவித்த நிலையில், கைது செய்யப்படும் மீனவர்களுக்கான அபராதத்தை உயர்த்தி இலங்கை அரசு அதிர்ச்சி அளித்துள்ளது.
ராமேசுவரம் முதல் நாகை மாவட்டம் வரை உள்ள கடலோரப் பகுதியில் மீனவர்கள் விசைப்படகு, நாட்டுப்படகில் மீன் பிடிக்கின்றனர். இரு நாடுகளுக்கும் இடையில் மீன்பிடிப்புப் பகுதிகள் உள்ளதால், தமிழ்நாடு — இலங்கை மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் படகுகளை தொடர்ந்து சிறை பிடிக்கின்றனர்.
பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள படகுகள், பல மாதம் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க, தமிழ்நாடு மீனவர்கள் போராடுகின்றனர். இந்நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி பிடிபடும் படகிற்கு, 6 லட்சம் ரூபாயாக இருந்த நிவாரணத்தை தற்போது 8 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், சிறையில் உள்ள மீனவர் குடும்பத்திற்கான நிவாரணம் ஒரு நாளுக்கு, 350 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் வழங்கவும் மார்ச் 5இல் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதனால் ஆவேசமடைந்த இலங்கை மீனவர்கள், ‘நிவாரணத்தை உயர்த்தியுள்ளது, எல்லை தாண்டி மீன் பிடிப்பதை தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளது.
எனவே நீதிமன்றம் மீனவர்களுக்கு விதிக்கும் அபராத தொகையை உயர்த்த வேண்டும்’ எனக்கோரி போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக, இலங்கை பிடித்து செல்லும் படகுகளுக்கு இதுவரை 50,000 ரூபாய் மட்டுமே விதிக்கப்பட்டு வந்த அபராதம் தற்போது உயர்த்தப்பட்டுஉள்ளது. மார்ச் 7இல் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தலா, 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. அபராதம் உயர்வால் ராமேசுவரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.