தர்மேந்திர பிரதானை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் – தொல். திருமாவளவன்

viduthalai
2 Min Read

புதுடில்லி, மார்ச் 11 மக்களவையில் தமிழ் நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப் பினர்களை ‘சனநாயக மற்றவர்கள்’ ‘அநாகரிகமானவர்கள்’ என்றும் இழிவுபடுத்திய தர்மேந்திர பிரதானை அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

நாடாளுமன்றத்தில் உண்மைக்கு மாறான தகவலை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவு செய்திருக்கிறார். 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சேர்ந்து கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களைச் சந்தித்தார். அந்தக் குழுவில் விசிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இடம் பெற்றிருந்தோம். அப்போது, ‘ தேசிய கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று வெளிப்படையாக நீங்கள் சொல்வதால் எங்களுக்கு அரசியல் ரீதியான சிக்கல் ஏற்படுகிறது. எனவே, பிஎம் சிறி பள்ளிகளை ஏற்றுக் கொள்கிறோம் எனப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுங்கள். அதன் பிறகு நீங்கள் அதை நிறைவேற்றவில்லை என்றாலும் எங்களுக்குப் பிரச்சினை இல்லை’ என தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
அப்போது, “ நாங்கள் நவோதயா பள்ளிகளையும் ஏற்கவில்லை. மும்மொழி கொள்கையையும் தமிழ்நாடு எப்போதுமே ஏற்றதில்லை. எனவே, ஹிந்தி கட்டாயம் என்கிற பிஎம்சிறீ பள்ளிகளையும் நாங்கள் ஏற்க முடியாது. அதனை வற்புறுத்தாமல் வழக்கமாக தரப்படும் “சமகரா சிக்ஷாவுக்கான” நிதியைத் தான் விடுவியுங்கள் என்று கேட்கிறோம். எங்களுக்கு பிஎம் சிறீ பள்ளிகளுக்கான நிதி தேவையில்லை” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். நாங்களும் அமைச்சரிடம் அதையே வலியுறுத்திக் கேட்டோம். ஆனால், அவர் அவ்வாறு நிதியை விடுவிக்க உடன்படவில்லை.

இப்படியிருக்க அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஏதோ தமிழ்நாடு அரசு பிஎம் சிறீ பள்ளிகளை ஏற்றுக்கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஒப்புதல் அளித்தது போலவும், அதன் பிறகு பின்வாங்கிக் கொண்டது போலவும் மக்களவையில் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, முதலமைச்சர் ஒப்புக்கொண்டார். அவர் ஒப்புக்கொண்ட பிறகு அந்த முடிவை மாற்றச் செய்த சூப்பர் முதலமைச்சர் யார்? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது அப்பட்டமான பொய் மட்டுமல்ல; அவதூறான செய்தியும் ஆகும்.

அவ்வாறு அவதூறு பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு மறுப்பு தெரிவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களை ‘சனநாயகம் அற்றவர்கள்’ ‘அநாகரிகமானவர்கள்’ என்று இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார். மக்களவையின் மரபை மீறி உண்மைக்கு மாறான செய்திகளைப் பதிவு செய்தது மட்டுமின்றி, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இழிவு படுத்தியதன் மூலம் தமிழ்த்தேசியப் பேரினத்தையே அவமதித்திருக்கிறார். இந்நிலையில், தர்மேந்திர பிரதான் அவர்கள் அந்தப் பதவியில் நீடிப்பதற்குத் தகுதியானவர் அல்ல. அவரை உடனடியாகக் கல்வி அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *