புதுடில்லி, மார்ச் 11 ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது. குறிப்பாக அதில் இடம்பெற்று உள்ள மும்மொழிக் கொள்கை மூலம் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி அந்த கொள்கையை ஏற்க மறுத்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டு மக்களின் பிரிதிநிதிகளாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்களவையில் அவமானப்படுத்தி பேசி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தின் நிதி நிலை அறிக்கைக்கான இரண்டாவது கூட்டம் நேற்று (10.3.2025) முதல் நடந்துவருகிறது
தமிழ்நாடு மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக் கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2024-2025-ஆம் ஆண்டுக்கான நிதி ரூ.2,152 கோடியும் ஒன்றிய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காவிட்டால் கல்வி நிதி கிடையாது என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அவரின் கருத்துக்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
நேற்று (10.3.2025) நாடாளுமன்றம் துவங்கிய உடனே மும்மொழிக் கொள்கை பிரச்சினை புயலை கிளப்பியது. தமிழ்நாடு உறுப்பினர்கள் ஒன்றிய கல்வி அமைச்சர் இடையே விவாதம் நடந்தது. அப்போது தமிழ்நாடு உறுப்பினர்கள் நேர்மையாக இல்லை. ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கிறார்கள். நாகரிகமற்றவர்கள் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
அமைச்சரின் கருத்துக்கு தமிழ்நாடு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவையின் மய்யப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர். மேலும் ஒன்றிய அமைச்சருக்கு எதிராக திமுக எம்.பி. கனிமொழி உரிமை மீறல் தாக்கீது அளித்தார்.
இந்த நிலையில், மும்மொழிக் கொள்கை தொடர்பாக அவையை ஒத்திவைத்து விவாதிக்கக்கோரி திமுக எம்.பி. கனிமொழி தாக்கீது அளித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை தொடர்பாகவும் விவாதம் நடத்த கோரிக்கை வைத்துள்ளார். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்: புதிய கல்விக்கொள்கை விவகாரம், மும்மொழிக்கொள்கை, ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சிக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (11.3.2025) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கருப்பு உடை அணிந்து, பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.