அ.தி.மு.க., த.வெ.க. கட்சிகளின் உள்நோக்கம் விரைவில் வெளிவரும்
அமைச்சர் கீதாஜீவன் கூறுகிறார்
சென்னை,மார்ச் 10- பா.ஜ.வின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றவே அதிமுக, தவெக கட்சிகள் செயல் படுகின்றன. அவர்களின் உள்நோக்கம் என்ன என்பது விரைவில் வெளி வரும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி என பெண்களே பாராட்டும் வகையில் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
கடந்த 31.3.2021 வரை மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப் பட்டு இருக்கிறது. இதன் மூலம், 15 லட்சத்து 88 ஆயிரம் பெண்கள் பயன் பெற்று உள்ளனர்.
தமிழ்நாடு முதலிடம்
5 சவரன் வரை கூட்டுறவு வங்கி களில் கடன் வைத்திருந்தவர் களுக்கு தள்ளுபடி செய்ததில் பெண்கள் பலர் பயன்பெற்றனர். மகப்பேறு விடுப்பு காலம், தற்போது 12 மாதங்களாக உயர்த்தப்பட்டு உள்ளது.
மகளிர் சுய உதவிக்குழு கடன் உச்சவரம்பு, ரூ.12 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தி உள்ளோம். நாட்டிலேயே அதிக பொருளாதார சுதந்திரம் பெற்ற பெண்களில், தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இதுவெல்லாம் தெரிந்தும் தெரியாதது போல சிலர் விமர்சிக்கின்றனர்.
பெண்கள் பாதுகாப்பு
பெண்கள் பாது காப்பு விசயத்தில் அரசு எந்த சமரசமும் செய்வதில்லை. சமூக நலத்துறை, காவல்துறை இதில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாதிக்கப்பட்டவரை புகார் கொடுக்க முன்வர செய்வது, வழக்குப் பதிவு செய்வது, அந்த வழக்கை வேகப்படுத்துவது என செயல்திட்டம் தொடர்பாக முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் அரசு துறைகள் சார்பில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
அங்கு ஒன்று, இங்கு ஒன்று என குழந்தைகளுக்கான எதிராக நடக்கும் சில குற்றச்செயல்கள் கூட, வெளியே வராத நிலை இருந்தது.
இது தொடர்பான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தியதன் காரணமாக, புகாரும், அந்த புகாரின் மீதான உடனடி நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் முதல் தகவலறிக்கை (FIR) போடவே போராட வேண்டி யிருந்தது.
உள்நோக்கம்
அரசின் திட்டங்களை தவெக தலைவர் விஜய் தெரிந்து கொள்ள வேண்டும். பெண் களிடம் பேசி, அவர் தெரிந்துகொள்ள வேண்டும். பாஜவின் நோக்கத்தை நிறைவேற்ற அதிமுகவும், தவெகவும் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு ஏற்றாற் போல் அறிக்கை வெளி யிடுகிறார்கள்.
அதிமுக, தவெக ஆகிய கட்சிகளின் உள்நோக்கம் என்ன என்பது விரைவில் வெளிவரும். இவ்வாறு அவர் பேசினார்.