பெருமதிப்பிற்கும், நமது பேரன்பிற்குமுரிய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி மாண்பமை ஜஸ்டீஸ் வி. இராமசாமி அவர்கள் 8.3.2025 அன்று அதிகாலையில் தமது96 வயதில் காலமானார் என்ற செய்தி கேட்டு, சொல்லொணா துயரம் அடைகிறோம்.
ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து நீதி வழங்குவதில் ஒப்பற்ற ஆற்றலாளராகவும், தலைசிறந்த சட்ட விளக்க வல்லுநராகவும் அதே நேரத்தில் சமூகப் பார்வையுடன், தாம் வழங்கிய தீர்ப்புகள் சட்ட வரம்பினுள் சமூகநீதி, மக்கள் நலப் பார்வையோடு அமைந்து, காலத்தை வென்று நிற்கக் கூடிய சமூகக் காப்பு ஆவணங்கள் என்ற வரலாற்றுப் பெருமைக்கு உரியவர் ஆவார்.
எடுத்துக்காட்டாக, அ.தி.மு.க. முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அவரால் தவறாகக் கொண்டு வரப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கான 9 ஆயிரம் வருமான வரம்பு என்ற அரசு ஆணைபற்றி பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் திராவிடர் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கொண்டு வந்த பிரபல வழக்கில், மற்ற இரண்டு (மொத்தம் 3 நீதிபதிகள் அமர்வு) நீதிபதிகள் செல்லும் என்று தீர்ப்பளித்த போதிலும், அது செல்லாது என்று தனது உறுதிமிக்க தீர்ப்பை – ஆணித்தரமான காரணகாரியத்துடன் விளக்கி, துணிவுடன் தந்த தகைமையாளர் அவர். கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு உரிமையைப் பாதுகாத்த அவரது தீர்ப்பு மாற்றத்தை ஏற்படுத்த பெரிதும் உதவியது.
பிறகு அவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எவரும் செல்லத் தயங்கிய பஞ்சாப் (சண்டிகர்) மாநிலத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று அங்கு சமூகநீதியை, நியமனங்களை வற்புறுத்தி செயலாக்கியதன் விளைவாக, ஆதிக்க சக்திகளால் வீண் பழி சுமத்தப்பட்டு, தனது பொறுப்புகளைத் துறந்தவர். (அரும்பெரும் சமூகநீதிக் காவலர்).
மக்கள் நீதிபதியாக பல தீர்ப்புகளை வழங்கி, தனி சிறப்பு பெற்றவர். அவருக்காக முத்தமிழறிஞர் கலைஞரும், எங்களைப் போன்றவர்களும் இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டனம் செய்து ஓங்கிக் குரல் கொடுத்தவர்கள்.
ஓய்வுக்குபின் சென்று சந்தித்து நலம் விசாரித்தோம் – சீரிய மனிதநேயப் பண்பாளர், அவரது இழப்பு பேரிழப்பாகும்.
அவரை இழந்து துயரமுறும் அவரது பிள்ளைகள் – மகள், மருமகன் உள்பட அனைத்து குடும்பத்தவர்களுக்கும் எமது ஆறுதலைக் கூறுவதோடு, அவரது மறைவுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் நமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு நமது வீர வணக்கம்!
கி.வீரமணி
தலைவர்
முகாம்: சிங்கப்பூர் திராவிடர் கழகம்
குறிப்பு: கழகம் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கழக வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன் ஆகியோர் சென்று மலர் வளையம் வைத்து, இறுதி மரியாதை செய்தனர். சிங்கப்பூரில் அவரது அருமை மகன் சஞ்சய் இராமசாமி அவர்களிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு (8.3.2025 மாலை) ஆறுதலும் கூறினார் கழகத் தலைவர் ஆசிரியர்.