அமித்ஷாவையே தெரியாத பி.ஜே.பி.யினர்!
அமித் ஷாவுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில்
ராணிப்பேட்டை, மார்ச் 8 ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (CISF) ஆட்சேர்ப்பு பயிற்சி மய்யம் (RTC) செயல்பட்டு வருகிறது. மத்திய தொழில்துறை பாதுகாப்பு படைக்காக தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்த பின் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், 7.3.2025 அன்று CISF-இன் 56 ஆவது ஆண்டு எழுச்சி நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். ஒன்றிய அமைச்சர் வருகையை ஒட்டி ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க.வினர் சார்பில் அமித் ஷாவை வரவேற்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.
வரவேற்பு சுவரொட்டிகளில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு பதிலாக தமிழ் திரையுலகில் பிரபல நடிகரும், இயக்குநருமான சந்தான பாரதியின் நிழற்படம் இடம்பெற்று இருக்கிறது. ஏற்கெனவே சிலமுறை பா.ஜ.க. சுவரொட்டிகளில் அமித் ஷாவுக்குப் பதிலாக சந்தான பாரதியின் நிழற்படம் இடம்பெற்று இருந்தது. இந்த நிலையில், தற்போது ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் மீண்டும் அமித் ஷாவுக்குப் பதிலாக நடிகர் சந்தான பாரதியின் நிழற்படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.