உரிமைகளுக்காகப் பெண்களே வீதியில் இறங்கிப் போராடுவீர்!
சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான
33 விழுக்காடு சட்டத்தை இனியும் தாமதப்படுத்தக் கூடாது!
உலக மகளிர் தினமான (மார்ச் 8) இந்நாளில், பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக வீதியில் இறங்கிப் போராட முன்வரவேண்டும். இதுவே உலக மகளிர் நாளில் திராவிடர் கழகம் விடுக்கும் செய்தி என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை
வருமாறு:
இன்று உலகெங்கும் மகளிர் நாள் கொண்டா டப்படுகிறது. பெண்ணுரிமை இயக்கமான தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கத்தின் சார்பில் மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கி றோம்.
இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை முதலில் அளித்தது நீதிக்கட்சி ஆட்சியில்தான்!
தென்னிந்திய நலவுரிமைச் சங்கமான நீதிக்கட்சி ஆட்சியில் இந்தியாவிலேயே சென்னை மாநிலத்தில்தான் பெண்களுக்கு முதன் முதலாக 1921 இல் வாக்குரிமை வழங்கப்பட்டது.
பெண்ணுரிமை என்று சொல்லும்பொழுது, முதலில் நாட்டு மக்களின் கண்களுக்குத் தெரிவது தந்தை பெரியார்தான்.
சுயமரியாதை இயக்க மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட பெண்ணுரிமைத் தீர்மானங்கள்
1929 முதல் அவர் நடத்திய சுயமரியாதை மாநாடு களின் தீர்மானங்களைப் பட்டியலிட்டால், அதில் பெண்ணுரிமைக்குத்தான் முக்கியமான இடமாக இருக்கும். பெண்களுக்குச் சொத்துரிமை, கல்வி உரிமை, காவல்துறை, இராணுவங்களில்கூட வேலை வாய்ப்பு, பெண்களுக்கு மறுமண உரிமை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
பெண்களுக்காக தந்தை பெரியார் பெருந்தொண்டு ஆற்றியதன் காரணமாகத்தான் 1938 இல் (நவம்பர் 13) பெண்கள் மாநாடு கூட்டி ‘‘பெரியார்‘‘ என்ற பட்டத்தை வழங்கினர்.
‘‘பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெறவேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே இருக்கிறது’’ என்றார் தந்தை பெரியார் (‘குடிஅரசு’, 16.6.1935, பக்கம் 7).
தந்தை பெரியார் கருத்து
உலக மானுடத்துக்கே தேவையானது!
தந்தை பெரியாரின் இந்தக் கருத்து குறிப்பிட்ட நிலப் பகுதியைச் சேர்ந்த பெண்களுக்கானது மட்டுமே என்பதல்ல; உலக மானுடத்திற்கே முக்கியமானது – முன்மாதிரியானதும்கூட!
தந்தை பெரியாரின் ‘‘பெண் ஏன் அடிமையா னாள்?’’ என்ற நூல் பல மொழிகளில் உலகெங்கும் சென்றடைந்து, பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி யிருக்கிறது.
சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அகில இந்திய காங்கிரசின் பொதுச்செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி தமது உரையில், தந்தை பெரியாரின் ‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’ என்ற நூலைப்பற்றிப் பெருமை பொங்கக் குறிப்பிட்டுள்ளார்.
முத்தமிழறிஞர் ஆட்சியில் பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளிட்ட பெண்கள் வளர்ச்சிக்கான அடுக்கடுக்கான திட்டங்கள் – சட்டங்கள்!
தி.மு.க. ஆட்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் இந்தியா விலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் 1989 இல் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 2005 ஆம் ஆண்டில்தான் காங்கிரஸ் ஆட்சியில் இந்திய அளவில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
‘‘மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர்!’’
கலைஞர் ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் மளமளவெனக் கொண்டு வரப்பட்டன. அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு, உள்ளாட்சித் தேர்தல்களில் 50 விழுக் காடு, பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி, மகளிர் சுயநிதி குழுக்கள் எனப் பெண்களின் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை அவர் கொண்டு வந்ததால், திராவிடர் கழகத்தின் சார்பில் ‘‘மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர்’’ என்ற விருது வழங்கப்பட்டது.
‘‘திராவிட மாடல் ஆட்சியில்‘‘ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பெண்கள் வளர்ச்சியில் அதிவேகம்!
இன்றைக்குத் ‘திராவிட மாடல்‘ ஆட்சி நடத்தும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி யில், பெண்களின் வளர்ச்சி நோக்கி வாயு வேகத்தில் திட்டங்களும், உதவிகளும் நிரம்பி வழிகின்றன.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பான தோழி விடுதிகள் திறக்கப்பட்டன.
அரசுப் பணிகளில் பெண்களுக்கு இடம் 40 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.12 லட்சம் என்பது ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டது.
தொழில் முனைவோர்களாகப் பெண்கள்!
பெண்களைத் தொழில் முனைவோராக்கும் ‘டான்சிட் திட்டம்‘ சிப்காட் திட்டம், விடியல் பயண திட்டம், ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்குக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
திராவிட ஆட்சி என்ன செய்தது?என்று இந்தத் திசையில் எவரும் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு இந்தியாவிலேயே பெண்ணுரிமையும், வளர்ச்சியும் கொடிகட்டிப் பறக்கும் மாநிலமாக தமிழ்நாடு தலை நிமிர்ந்து நடைபோடுகிறது.
சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான 33 விழுக்காடு சட்டத்திற்கு முட்டுக்கட்டை
சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 33 விழுக்காடு சட்டம் இன்னும் முழுமை பெறாமல், சட்டம் ஆக்கப்படாமல் நட்டாற்றில் நிற்கிறது.
கட்சிகளைக் கடந்த ஆண் ஆதிக்கமும் இதற்குக் காரணம் என்பதில் அய்யமில்லை.
திராவிடர் கழகத்தின் மாநாடுகளும் – போராட்டங்களும்!
இதற்காகத் திராவிடர் கழகம் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. பல மாநாடுகளையும் நடத்தியுள்ளது. களத்தில் இறங்கிப் போராடியுள்ளது.
‘‘‘பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா?’ அது போன்றதே ஆண்களால், பெண்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதும்’’ என்றார் தந்தை பெரியார் (‘குடிஅரசு‘, 12.8.1928).
பெண்களே வீதியில் இறங்கிப் போராடுவீர்! இதுவே திராவிடர் கழகத்தின் உலக மகளிர் நாள் செய்தி!
பெண்களுக்கான பிரதிநிதித்துவம் என்ற இந்த உரிமை மிகமிக முக்கியமானது. நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் இதுவரை 15 விழுக்காட்டைத் தாண்டவில்லை. இந்த மிக முக்கிய பிரச்சினையில், பெண்களே, கட்சிகளைக் கடந்து களத்தில் இறங்கிப் போராடுவீர்!
இதுவே திராவிடர் கழகத்தின் உலக மகளிர் உரிமை நாள் செய்தி!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
8.3.2025