எப்பக்கம்  புகுந்துவிடும் ஹிந்தி? 

1 Min Read
கருவாடு மீனாகித் துள்ளிடவும் கூடும்
காகிதப்பூ மல்லிகையாய் மணந்திடவும் கூடும்
கருங்கல்லில் நெற்பயிர்கள் விளைந்திடவும் கூடும்
குறிஞ்சிமலர் அன்றாடம் மலர்ந்திடவும் கூடும்
திருநங்கை குழந்தைகளைப் பெற்றிடவும் கூடும்
தேன்முருங்கை மூங்கிலிலே காய்த்திடவும் கூடும்
ஒருதமிழன் உயிரோடு இருக்கும்வரை ஹிந்தி
ஓடிவந்து எப்பக்கம் புகுந்துவிடக்கூடும்?
கொழுக்கட்டை வெடிகுண்டாய் மாறிடவும் கூடும்
குயில்கூட மயிலாக மாறிடவும் கூடும்
மெழுகாக இமயமலை உருகிடவும் கூடும்
மேலநோக்கி காவிரியும் பாய்ந்திடவும் கூடும்
முழுநிலவாய் முப்பதுநாள் தோன்றிடவும் கூடும்
முழுவானில் விண்மீனை எண்ணிடவும் கூடும்
முழுமானத் தமிழன்தான் இருக்கும்வரை ஹிந்தி
முன்னேறி எப்பக்கம் புகுந்துவிடக் கூடும்?
முடவனுந்தான் கொம்பேறித் தேன்எடுக்கக் கூடும்
முயலுக்கே கொம்புகூட முளைத்திடவும் கூடும்
வடக்கொருநாள் தெற்காக மாறிடவும் கூடும்
வானத்தில் மக்களெல்லாம் நடந்திடவும் கூடும்
கடல்கூட வற்றினாலும் வற்றிடவும் கூடும்
கற்சிலையோ வாய்விட்டுப் பேசிடவும் கூடும்
மடலேறும் தமிழன்தான் இருக்கும்வரை ஹிந்தி
மறுபடியும் எப்பக்கம் புகுந்துவிடக் கூடும்?
கற்றாழை கசக்காமல் இனித்திடவும் கூடும்
கறந்தபால் மீண்டும்மடிப் புகுந்திடவும் கூடும்
ஒற்றுமையாய்ப் பாம்புடனே கீரிவாழக் கூடும்
உச்சிஇடி விழுந்தாலும் உயிர்பிழைக்கக் கூடும்
முற்றல்பலா முழுக்கசப்பாய் மாறிடவும் கூடும்
முக்கடலும் மேடாகி மலையாகக் கூடும்
கொற்றவன்தான் என்தமிழன் இருக்கும்வரை ஹிந்தி
குறுக்கேதான் எப்பக்கம் புகுந்துவிடக் கூடும்?
புலிமடியில் மான்குட்டி பால்குடிக்கக் கூடும்
பகற்பொழுதும் இரவாக மாறிடவும் கூடும்
புளியமரக் கிளைதனிலே புடல்காய்க்கக் கூடும்
பூவரசில் பூசணிக்காய் காய்த்திடவும் கூடும்
கிளிகூட ஏடெடுத்துக் கவியெழுதக் கூடும்
கேழ்வரகு மீதிருந்து நெய்வடியக் கூடும்
புலிபோன்ற தமிழன்தான் இருக்கும்வரை ஹிந்தி
புறப்பட்டு எப்பக்கம் புகுந்துவிடக்கூடும்?

– கவிஞர்.முத்தரசன் 
தமிழ்நாடு அரசின் கபிலர் விருதாளர் 
பெரம்பலூர். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *