ஈரோடு, மார்ச் 7 ஜூன் மாதத்திற்குள் 4 ஆயிரம் பேராசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.
கவுரவ விரிவுரையாளர்
ஈரோட்டில் நேற்று அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குறித்த குற்றச்சாட்டு நீதிமன்றத்திலும் காவல்துறையிலும் இருக்கிறது. தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழகங்கள் மற் றும் உயர் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
யுஜிசி திருத்தங்களை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானத்தை முதலமைச்சர் நிறைவேற்றி இருக்கிறார். ஆந்திர சட்ட மன்றத்திலும் இதேபோல் எதிர்ப்பு வந்திருக்கிறது. கேரளா மற்றும் கருநாடகா முதலமைச்சர்களும் வலுசேர்த்து இருக்கிறார்கள். ஆளுநருக்கு உரிய பணி என்ன? அதை எந்த காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டும். அதை நெறிமுறை படுத்துவது எவ்வாறு என கேட்டு, இந்தியாவில் முதன்முதலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதும் தமிழ்நாடு தான். தீர்ப்பு நிலுவையில் உள்ளது. தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில், 2200 கவுரவ விரிவுரையாளர்களை நியமித்திருக்கிறோம்.
4 ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள்
அது போதிய அளவில் இல்லை. இந்த மாதம் 6, 7, 8 தேதிகளில் செட் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட இருக்கிறது. அதற்கான நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் அல்லது அக்டோபரில் மீண்டும் ஒருமுறை செட் தேர்வு நடத்தி காலி பணியிடங்கள் நிரப்பப்படும். மார்ச் இறுதிக்குள் ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்களும், ஜூன் மாதத்திற்குள் 4 ஆயிரம் பேராசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும். கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க கோரிக்கைகள் ஈரோட்டில் வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஒப்புதல் பெற்று அறிவிக்கப்படும். இவ்வாறு கோவி.செழியன் கூறினார்.