மதவெறி தலை தூக்கல் உத்தரப்பிரதேசத்தில் ‘ஹோலி’யில் பங்கேற்க முஸ்லிம்களுக்கு தடை பிஜேபி மற்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்தலாம்

viduthalai
2 Min Read

மதுரா, மார்ச் 6 உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா பிருந்தாவனில் பிரஜ் ஹோலி கொண்டாட்டங்கள் மிகவும் பிரபலமானவை. இங்கு கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் இருப்பதே அதற்கு காரணம். இங்கு மார்ச் 13-ஆம் தேதி ஹோலி தொடங்கி ஒரு வாரம் நடை பெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் உள்ளூர் முஸ்லிம்களும் பங்கேற்பது வழக்கம். இதற்கு தடை விதிக்க உ.பி.பாஜக சட்டமன்ற உறுப்பினரும் இந்துத்துவா அமைப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

ேஹாலி

இதுகுறித்து மதுரா பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் சவுத்ரி கூறும்போது, “இந்து விழாகளில் முஸ்லிம்கள் பங்கேற்பது சமூக முரண்பாடுகளுக்கு வழிவகுக்கிறது. எங்கள் விழாவில் முஸ்லிம்கள் பங்கேற்பதன் மூலம், அவர்கள் ‘காதல் ஜிஹாத்’ மற்றும் துன்புறுத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம், முஸ்லிம்கள் இந்து விழாக்களை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்” என்றார்.
அகில இந்திய சந்த் சமிதி இந்துத்துவா அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் சுவாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கும்பமேளாவில் இருந்து ரொட்டி, ஹோலியில் இருந்து வேடிக்கையை இவர்கள் விரும்புகின்றனர். எனவே, பிருந்தாவன் ஹோலி விழாக்களில் இந்துக்கள் அல்லாதோர் நுழைவதை முழுமையாக யோகி அரசு தடை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தடை

“உ.பி.யின் அனைத்து இந்து புனிதத் தலங்களிலும் முஸ்லிம்கள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்” என்று சிறீ கிருஷ்ண ஜென்ம பூமி தொடர்பான சட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்குரைஞர் தினேஷ் லஹரி வலியுறுத்தி உள்ளார். தவிர கோயில்களுக்கு அருகில் முஸ்லிம்கள் கடை வைப்பதை தடை செய்ய கோரியும் முதலமைச்சர் ஆதித்யநாத்துக்கு தன் ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையில், தற்போது தொடங்கியுள்ள ரமலான் மாதத்தில், மசூதிகளின் ஒலிபெருக்கிகளை அகற்றும் பணியும் நடக்கிறது. இதுகுறித்து உ.பி. மேனாள் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி கூறுகையில், “இந்தியா அனைத்து மதங்களையும் மதிக்கும் ஒரு மதச்சார்பற்ற நாடு. ஒன்றிய மாநில அரசுகள் அனைத்து மதங்களைப் பின்பற்றுபவர்களையும் பாரபட்சம் இல்லாமல் சமமாக நடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். முஸ்லிம் மதத் தலைவர் சவுத்ரி இப்ராகிம் உசைன் கூறும்போது, “ஹோலியில் முஸ்லிம்கள் பங்கேற்பு ஏற்கெனவே மிகக் குறைவு. ஏனெனில், ஹோலியில் பயன்படுத்தும் வண்ணங்கள் இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு எதிரானது” என்று தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *