கடந்த ஆண்டில் விசா கோரி 67.5 லட்சம் பேர் விண்ணப்பம்!

viduthalai
1 Min Read

புதுடில்லி, மார்ச் 6- இந்தியாவிலிருந்து விசா வேண்டி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2024ஆம் ஆண்டில் 67.5 லட்சத்தைத் தொட்டுள்ளது. இதையடுத்து, கரோனாவுக்கு முந்தைய விறு விறுப்பான நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக, கரோனாவுக்கு முந்தைய 2019 காலகட்டத்தில் விசா வேண்டி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 65 லட்சமாக இருந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

இதுகுறித்து விசா ஆதாரம் மற்றும் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமான விஎப்எஸ் குளோபலின் தலைமை செயல்பாட்டு அதிகாரியான (தெற்கு ஆசியா) யம்மி தல்வார் கூறுகையி்ல், “கனடா, சீனா, பிரான்சு, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, சுவி்ட்சர்லாந்து, சவுதி அரேபியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை இந்தியர்களின் சுற்றுலாவுக்கான முக்கிய விருப்பத் தேர்வு நாடுகளாக உள்ளன.
கடந்த 2024ஆம் ஆண்டில் 3 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு பயணமாகியுள்ளனர். இது, 2023ஆம் ஆண்டின் எண்ணிக்கையான 2.8 கோடியுடன் ஒப்பிடுகையில் 8.4 சதவீதம் அதிகமாகும். அதேசமயம், 2019ஆம் ஆண்டின் 2.7 கோடியுடன் ஒப்பிடுகையில் 12.3 சதவீதம் உயர்வாகும்.

பன்னாட்டு பயணத்துக்கான தேவை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பாண்டிலும் இந்த விறுவிறுப்பு தொடரும்.
ஆனால், கரோனாவுக்குப் பிறகு இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு இன்னும் சூடுபிடிக்கவில்லை. மத்திய சுற்றுலா அமைச்சக புள்ளிவிவரத்தின்படி 2024இல் 96.6 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வந்துள்ளனர்.

இது, 2023ஆம் ஆண்டின் எண்ணிக்கையான 95.2 லட்சத்தை காட்டிலும் 1.4 சதவீதம் மட்டுமே அதிகம். அதேநேரம், 2019 உடன் (1.1 கோடி) ஒப்பிடுகையில் இது 11.6 சதவீதம் குறைவு” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *