கேள்வி: தேர்தலில் அறிவிக்கப்படும் இலவசங்களால் மக்கள் வேலைக்குச் செல்ல விரும்பாமல் சோம்பேறிகளாகி விட்டனர் என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளதே…?
பதில்: தமிழகத்தில் இலவசங்களால் மக்கள் சுணங்கி விட்டதால், வட மாநிலத்தவர் இங்கு வந்து வேலை செய்ய வேண்டியிருக்கிறது. அதன் பாதிப்பை நாம் தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
( –‘தினமலர்‘ வாரமலர், 2.3.2025, பக்கம் 10)
அப்படியா?
மாணவர்களும், மாணவிகளும் கல்லூரியில் சேர்ந்து படிக்க மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறது தமிழ்நாடு அரசு.
பெண்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க வழி செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
கல்வி வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம் என்றாலே இந்த சங்கி ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு ஒவ்வாமையாகத்தான் இருக்கும்.
ஏழை, எளிய மாணவர்களுக்கு அளிக்கும் உதவி என்பது மனிதநேயத்தின் அடிப்படையிலானது.
ஏழை, பணக்காரன் என்பதெல்லாம், ‘அவாள் அவாள் தலையெழுத்து‘ என்பதுதானே ‘தினமலர்‘க் கும்பல் சொல்லி வைத்திருக்கும் ஸநாதன கருத்து.
திராவிட இயக்க ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கள் அதிக விழுக்காட்டில் படித்திருப்பது தமிழ்நாட்டில்தான்.
காலை உணவு, மதிய உணவு அளித்து, முதல் தலைமுறையாகப் படிப்பவர்களை ஈர்க்கும் அரும்பணியைச் செய்கிறது ‘திராவிட மாடல்‘ அரசு. இதன் காரணமாகப் பார்ப்பனர்கள் வயிற்றெரிச்சல் படத்தானே செய்வார்கள்.
24 மணிநேரமும் கடவுளையே பிரார்த்தனை செய்யுங்கள்; நினைத்தது நடக்கும் என்பதை விடவா பெரிய சோம்பேறித்தனம் உலகில் இருக்கிறது?
ஆமாம், நடந்து முடிந்த டில்லி சட்டமன்றத் தேர்தலில் இலவசங்களை அறிவித்ததே பி.ஜே.பி. – அது ‘தினமலரின்‘ ஊனக் கண்களுக்குத் தெரியாதா?
இலவசத்தால் தமிழ்நாட்டு மக்கள் சோம்பேறிகளாகி விட்டதால் வட நாட்டிலிருந்து வேலைக்காக தமிழ்நாட்டில் குவிகிறார்களாம்!
கண்டுபிடித்து விட்டாரய்யா திரிநூல் கொலம்பஸ்! பெரும்பாலும் வட மாநிலங்களில் பி.ஜே.பி. ஆள்கிறது. வேலை வாய்ப்புக்கு வக்கி்ல்லாததால், வளமான தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள் என்ற உண்மையை எழுத ‘தினமலர்‘ திரிநூல் கூட்டத்துக்கு எப்படி மனம் வரும்?
வெட்கக்கேடு!
– மயிலாடன்