தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி
சென்னை, மார்ச் 4 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு இலங்கை ரூ.60 லட்சம் அபராதம் விதிப்பதும், மீனவர்களை சிறையில் அடைப்பதும் பாஜ ஆட்சியில் தொடர்கதையாக நடந்து வருகிறது. இப்பிரச்சினையில் தலையும் தெரியாமல், வாலும் தெரியாமல் அபத்தமான கருத்துகளை கூறி கச்சத்தீவோடு முடிச்சு போட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து கூறியிருக்கிறார். ராமேஸ்வரம் சென்ற ஆளுநர் ஆர்.என். ரவி, மீனவர்களை சந்தித்து நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.
இதே ராமநாதபுரத்தில் கடல் தாமரை மாநாடு நடத்திய போது, பாஜ ஆட்சிக்கு வந்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும், மீனவர்கள் கைதும், படகுகள் பறிமுதலும் இருக்காது என்று அன்றைய எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் 2014 தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்தார். அதை நிறைவேற்றுவதற்கு கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை ஆளுநர் ஆர்.என். ரவி விளக்குவாரா? ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று நினைத்திருந்தால் 6 ஆண்டுகால வாஜ்பாய் ஆட்சியிலும், 10 ஆண்டுகால மோடி ஆட்சியிலும் அதற்காக எடுத்த நடவடிக்கைகள் என்ன ? 16 ஆண்டுகால பாஜ ஆட்சியில் கச்சத்தீவை மீட்க ஒரு துரும்பை கூட எடுத்து போடாதவர்கள் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது தான் மீனவர் பிரச்சினைக்கு காரணம் என்று திரும்பத் திரும்ப கூறுவது அப்பட்டமான கோயபல்ஸ் பிரசாரமாகும்.
இலங்கைக்கு நிதியுதவி செய்கிற பிரதமர் மோடி, கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தாரா ? ஏன் வைக்கவில்லை ? 2024 தேர்தல் பிரச்சாரத்தில் கச்சத்தீவை பற்றி பிரதமர் மோடி பேசியதற்கு பிறகு இதுவரை அதனை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார் ? இதன் மூலம் பாஜவின் இரட்டை வேடம் மட்டுமல்ல, பிரதமர் மோடியின் இரட்டை வேடமும் அம்பலமாகியுள்ளது. எனவே, தமிழ்நாடு மீனவர் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்று தமிழ் நாடு ஆளுநருக்கோ, ஒன்றிய பாஜ அரசுக்கோ அக்கறை இருக்குமேயானால் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுகுறித்து நடவடிக்கை எடுக்க கையாலாகவில்லை எனில் கச்சத்தீவை பற்றி ஆளுநர் ஆர்.என். ரவியும், பாஜகவினரும் பொதுவெளியில் பிதற்றாமல் இருப்பது நல்லது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.