மும்மொழித் திட்டத்தை எதிர்த்து நடக்கக்கூடிய போராட்டம் – கல்வியைத் தழைக்க வைப்பதற்காக நடக்கக்கூடிய போராட்டமே தவிர, இது வெறும் மொழிப் போராட்டம் அல்ல!
இது ஒரு தத்துவப் போராட்டம் – எதிர்காலத்தில் நம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடிய போராட்டம்!
தாம்பரம், மார்ச் 3 பெற்றோர்களே, தாய்மார்களே, கல்வியாளர்களே மும்மொழித் திட்டத்தை எதிர்த்து நடக்கக்கூடிய போராட்டம் – கல்வியைத் தழைக்க வைப்பதற்காக நடக்கக்கூடிய போராட்டமே தவிர, இது வெறும் மொழிப் போராட்டம் அல்ல – இது ஒரு கட்சிப் போராட்டம் அல்ல – இது ஓர் இனப் போராட்டம் அல்ல – இது ஒரு தத்துவப் போராட்டம். எதிர்காலத்தில் நம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடிய போராட்டம். எனவேதான், ஹிந்திக்கு இங்கே இடமில்லை. ஹிந்தித் திணிப்பை என்றைக்கும் எதிர்ப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
கடந்த 23.2.2025 அன்று மாலை சென்னை தாம்ப ரத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து – திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன உரையாற்றினார்.
அவரது கண்டன உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு வக்காலத்து வாங்குகிறவர்கள் வெட்கப்படவேண்டாமா?
மாதா மாதம் மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய்,. கல்லூரியில் படிக்கும் பெண்க ளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதையெல்லாம் பார்த்த ஒன்றிய அரசு, நிதியை தமிழ்நாட்டிற்குத் தரக்கூடாது என்று நினைக்கிறார்கள். மழை, புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதியாக கிள்ளிக் கூட கொடுக்கவில்லை. மனிதாபிமானம் உள்ளவர்களா அவர்கள்? அந்த ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு வக்காலத்து வாங்குகிறவர்கள் வெட்கப்படவேண்டாமா?
இந்த மக்களைக் காட்டிக் கொடுத்து, இந்த மண்ணைக் காட்டிக் கொடுத்து, அப்படி என்ன, எதற்கு நீங்கள் கட்சிப் பதவியை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? மானம், வெட்கம், சூடு, சொரணை இருப்பவர்கள் இதனை ஏற்பார்களா? என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு’ என்று சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.
‘‘அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும்!’’
நாங்கள் எங்களுடைய உரிமையைக் கேட்கிறோம். உரிமையையெல்லாம் சலுகை என்று நீங்கள் நினைக்க முடியாது. உரிமையை, சலுகை என்று கருதிக் கொண்டு நீங்கள் பேசினால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். ‘‘அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும்’’ என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
இதோ என் கைகளில் இருக்கின்ற புத்தகம் – சிங்கப்பூர் நாடு ஒரு சிறிய நாடாக இருந்தாலும், நவீன சிங்கப்பூராக ஆக்கிய பெருமை அண்மையில் மறைந்த அந்த நாட்டின் பிரதமர் லீ குவான் யூ அவர்களையே சாரும். உலக நாட்டினரால் மதிக்கப்பட்டவர் அவர். மிகப்பெரிய ஆளுமை உள்ளவர் அவர்.
சிங்கப்பூர் அதிபர் லீ குவான் யூ அவர்கள் எழுதிய புத்தகம்!
அப்படிப்பட்டவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் ‘‘My Lifelong Challenge: Singapore’s Bilingual Journey’’ என்ற தலைப்பில் உள்ளது அந்தப் புத்தகம்.
எல்லாவிதமான எதிர்ப்புகளையும் பார்த்து, தன்னு டைய ஆட்சியை நிலை நிறுத்திக் கொண்டவர். நம்மாட்கள் சிங்கப்பூருக்குச் சென்றால், எச்சில் துப்ப மாட்டேன் என்கிறார்கள். இங்கே வந்தால் துப்புகிறான்.
இரு மொழிக் கொள்கைக்கு ஒரு பெரிய பயணம் நடத்தியிருக்கின்றோம். முதலில் தாய்மொழி, எந்தத் தாய்மொழியாக இருந்தாலும், கட்டாயம் அவர்கள் படிக்க வேண்டும். உலக மொழியான ஆங்கிலம் கட்டாயம்.
அவர்களுடைய தேசிய மொழி என்று அறிவித்த நேரத்தில், மலாயா மொழி தொடக்கத்தில் இருந்தது. அதனையும் சேர்த்து நான்கு மொழிகள்.
நம்மூரில் வானொலி, தொலைக்காட்சி நிலை யங்களை ஹிந்தி மொழிக்கே குத்தகைக்கு விட்டாயிற்று. ஆங்கில செய்தி என்று சொல்வார்கள், முழுக்க முழுக்க ஹிந்தி மொழியாகத்தான் சத்தம் கேட்கும். பொதிகை என்பது காணாமல் போய்விட்டது. இப்போது ‘‘தூர்தர்ஷன் கேந்திரா’’ என்றாகிவிட்டது.
சிங்கப்பூரில் உள்ள ஒரு சிறிய நோட் புக் இது. பாக்கெட் நோட் புக்தான். எல்லா பொருள்களிலும் விலைப் பட்டியல் போட்டிருப்பார்கள். விலைப் பட்டியல் இல்லாமல், பொருள்களை விற்கக்கூடாது; அப்படி விற்றால், அது சட்ட விரோதமாகும்.
ஒரு சிறிய நாடான சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்!
இந்த சிறிய நோட் புக்கில், விலையைப் போட்டிருக்கிறார்கள். முதலில் ஆங்கில மொழியில், ‘Thank You’, பிறகு சைனீஸ் மொழியில் ‘xie xie’ (நன்றி) போட்டிருக்கிறார்கள். மூன்றாவதாக, தமிழில் ‘நன்றி!’ என்று போட்டிருக்கிறார்கள். அடுத்த தாக மலாய் மொழியில் ‘terima kasih’ (நன்றி) என்று போட்டி ருக்கிறார்கள். ஒரு சிறிய நாடான சிங்கப்பூரில்தான் இப்படி.
சிங்கப்பூருக்கு நான் சென்றிருந்தபோது சீனவர் ஒருவர் என்னிடம், ‘‘பெரும்பான்மையானவர்கள் சீனர்கள்தான் இங்கே இருக்கிறார்கள். 72 சதவிகிதத்திற்குமேல் இருக்கிறார்கள். இந்தியர்கள் 6 சதவிகிதம்தான் இருக்கிறார்கள்; மலாய்க்காரர்கள் 30 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். ஆங்கிலம் பேசக்கூடியவர்களும் இங்கே இருக்கிறார்கள்’’என்றார்.
பெரும்பான்மையானோர் சீனர்களாக இருப்பதால், சீன மொழியை ஆட்சி மொழியாக அதிகாரப்பூர்வமாக ஆக்கலாம் என்று சொன்னபோது, அப்படி கூடாது என்று அதிபராக இருந்த லீ குவான் யூ சொல்லிவிட்டு, அப்படி ஆட்சி மொழியாக சீனமொழியை ஆக்கினால், சீனர்கள் மட்டும்தான் பயன் பெறுவார்கள். மற்ற மக்களுடைய உணர்வுகளை நாம் புண்படுத்தியதாகும். அந்த மக்களை நான் விட்டுவிடத் தயாராக இல்லை. 72 சதவிகிதம் இருக்கின்றவர்களுக்கு என்ன உரி மையோ, அதே உரிமை 6 சதவிகிதம் இருக்கின்ற தமிழர்களுக்கும் உண்டு; அதே உரிமை 30 சதவிகிதம் உள்ள மலாய்க்காரர்களுக்கும் உண்டு. அதேபோன்று ஆங்கிலத்தை எல்லோரும் படிக்கவேண்டும் என்று சொன்னார்.
சிங்கப்பூரில் தொலைக்காட்சியை காலையில் ஆன் செய்தால், முதலில் எடுத்தவுடன் குட்மார்னிங், வணக்கம் என்று நான்கு மொழிகளிலும் சொல்லிவிட்டுத்தான் தொடங்குவார்கள். இரவு நிகழ்ச்சி முடியும்போதும், நான்கு மொழிகளில் வணக்கம் சொல்லிவிட்டுத்தான் முடிப்பார்கள்.
மக்களுடைய உணர்வுகளையும், கலாச்சாரத்தையும் நாம் மதிக்கவேண்டும்!
அந்த புத்தகத்தில் லீ குவான் யூ சொல்கிறார், ‘‘மக்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதை விட, அந்த மக்களுடைய உணர்வுகளையும், கலாச்சாரத்தையும் நாம் மதிக்கவேண்டும். ஆளுகின்றவர்கள் இதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்; அவர்கள் பெரும்பான்மையா, சிறுபான்மையா என்று பார்த்து, அதற்கேற்ப அளவுகளை வைக்கக்கூடாது. இது மிகவும் ஆபத்தான ஒரு செய்தி’’ என்று சொல்கிறார்.
மேலும் அந்தப் புத்தகத்தில்,
Language policy can make or break a nation
This brings me to my second principle, which is that language policy can become a key to economic success. Indeed it can make or break a nation. By choosing English as our language of administration, we managed to avoid the political fallout that would have come had we chosen either Malay over Chinese or Chinese over Malay. Language issues can stir strong emotions. Sri Lanka, another former British colony with a racially diverse population, is an example of a country where political developments might have panned out differently had its leaders chosen English as its working language instead of the language of its ethnic majority, Sinhalese. The 15 per cent of its population who are Tamil-speaking might have felt less imposed-upon. Singapore has been spared ethnic unrest because we have made tremendous effort to ensure equitable treatment of all races and communities. The stability has enabled us to direct our energies to growing the economy and raising our people’s standard of living. Knowing English has also enabled our people to secure jobs much faster; the multinational companies which set up their factories, research laboratories and regional headquarters in Singapore demand workers who are fluent in spoken and written English. In more recent years, with the rise of China, Singaporean workers who are bilingual in English and Chinese have also become much sought after by companies seeking to operate in China. Even China’s companies desire Singapore workers, seeing them as capable and incorrupt managers.
Language transmits values too
My third principle is that language is more than a tool of communication: it transmits values too. That is why we have insisted that all school-going children learn their mother tongue, whether Chinese, Malay or Tamil, as their second language. This way, they will have the means to tap on the rich heritage that their respective culture has to offer. Folk stories, for instance, are replete with tales of courage, generosity, hard work, honesty and filial piety. These are all good traditional values that are worth teaching and transmitting. By getting children to read these stories in their formative years, we are helping them to imbibe values that will shape their character. Reading these stories in their mother tongue will also help the children to develop a realisation that they are descended from civilisations that are thousands of years old. This will help them develop a sense of identity as to who they are and where they have come from.
I am not saying that one must know one’s mother tongue in order to have a well-developed sense of identity or that worthy values can be transmitted only via the mother tongue. There are many older Chinese Singaporeans who speak only English but who have no identity issues. Worthy values can be transmitted in any language, in the same way that the Bible or the Shakespearean classics can be read in any number of languages. What I am saying is that each ethnic culture has its own unique heritage that is worth preserving and teaching young. Singaporeans about.
இதன் தமிழாக்கம் வருமாறு:
மொழிகள் நம் பண்பாட்டின் மதிப்பையும்
பரவிப் படரச் செய்கின்றன: லீ குவான் யூ
‘‘மொழி என்பது தகவல் தொடர்புக்கான கருவியாக மட்டுமே செயல்படாமல் நம் பண்பாட்டின் மதிப்பை பரவிப் படரச் செய்யும் உதவிக்கரமாகவும் உள்ளது. பள்ளிசெல்லும் குழந்தைகளின் தாய் மொழி சீன மொழி, மலாய் அல்லது தமிழாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் தங்கள் தாய் மொழியை இரண்டாவது பாடமொழியாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். தங்கள் வளம் மிகுந்த பண்பாட்டின் பாரம்பரியச் சிறப்பை அவர்கள் உணர்ந்து கொள்ள அது வழி வகுக்கும்.
உதாரணமாக, மரபுக் கதைகளில் வீரதீர சாகசங்கள், உழைப்பின் நற்பயன்கள், துணிவு, மனிதநேயம், நன்னடத்தை இவையெல்லாம் மய்யக் கருக்களாக இருப்பதுண்டு. இப்படிப்பட்டவை பண்பாட்டின் மதிப்பை உணரச் செய்யக்கூடிய பயனுள்ள கதைகளாகும். இவை பள்ளிக் குழந்தைகளை சென்றடைய வேண்டும். அவர்களுக்கு கற்பிக்கப்படவேண்டும். வளரும் பருவத்தில் இத்தகைய கதைகளை அவர்கள் படிக்கச் செய்வதன் மூலம் அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக நம்மால் உருவாக்க முடியும். தங்கள் பண்பாட்டின் பெருமை புரிவதால் அவர்கள் மேன்மக்களாக வாழ்வில் உயரப்போவது உறுதி.
தங்கள் தாய்மொழியிலேயே இத்தகைய சிறந்த கதைகளை படிக்கும் வாய்ப்பு கிடைப்பதால் பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையான பரம்பரையிலிருந்து வந்தவர்கள் நாம் என்ற புரிதல் அவர்களுக்கு ஏற்படும். தங்கள் வேர்கள் எவை என்பதை அவர்கள் தெரிந்து கொள்வார்கள். தங்கள் அடையாளம் எது என்ற தெளிவு அவர்களுள் ஏற்படும். நாம் உண்மையில் யார்? எங்கிருந்து வந்தோம்? எது நமது வேர்? என்றெல்லாம் ஒரு புரிதல் இதனால் உருவாகும். இந்தப் புரிதல் அவர்களைப் பக்குவப்படுத்தி ஒழுக்கமுள்ள மனிதர்களாக நிச்சயம் செதுக்கும்.
ஓர் அடையாளத்திற்காகவும் பண்பாட்டின் மதிப்பு பரவிப்படருவதற்காகவும் மட்டுமே ஒருவர் தாய்மொழி யில் கற்கவேண்டும் என்பதல்ல நான் சொல்வதன் உட்கருத்து. ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடிய சீனர்க ளும் சிங்கப்பூர்வாசிகளாக மூத்த குடிமக்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு எந்த ஒரு அடையாளக் குழப்பமும் அதைச் சார்ந்த பிரச்னையும் இல்லை.
சிறந்த நற்பண்புகள் எந்த மொழி மூலமாகவும் பரவிப் படரலாம். பைபிள் எனும் வேதாகமத்தையும் ஷேக்ஸ்பியரின் காலத்தால் அழியாத படைப்புகளையும் பல மொழிகளில் நம்மால் படிக்க முடியும். நம் தாய் மொழியில் மட்டுமே அவற்றை படிக்க முடியும் என்ற நிலை இல்லை. நான் சுருக்கமாகச் சொல்ல விரும்புவது இதுதான் – இனம் சார்ந்த எந்த ஒரு பண்பாட்டிற்கும் தனிப்பட்ட பாரம்பரியம் உண்டு. சிங்கப்பூர் இளம்பிள்ளைகளுக்கு அவற்றைக் கற்பிப்பதன் மூலம் அந்த பாரம்பரியத்தின் சிறப்பையும் மரபின் பெருமையையும் நாம் பாதுகாக்க வேண்டும். எங்கள் சிங்கப்பூரின் இரு மொழிக் கொள்கையின் திட்டங்களுள் இது முக்கியமான ஒன்றாகும்’’ என்றார்.
நாடாளுமன்றத்தில் அண்ணா!
அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசும்பொழுது சொன்னார், ‘‘வேற்றுமையில் ஒற்றுமை காண்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம், ஒப்புக்கொள்கி றோம். ஆனால், ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்பு கிறேன், ‘யூனிட்டி இஸ் நாட் யூனிபார்மிட்டி’’’ என்றார்.
ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதற்காக, ‘‘எல்லோரும் அய்ந்தடிதான் இருக்கவேண்டும்’’ என்று சொல்ல முடியுமா? ‘‘எல்லோரும் கோதுமையைத்தான் சாப்பிட வேண்டும்’’ என்று சொல்ல முடியுமா?
ஆகவே, யூனிட்டி என்பது ஒற்றுமை; யூனிபார்மிட்டி என்பது சீர்மை.
ஆகவே, சீர்மையில் வேற்றுமை இருக்கும். அவர்களு டைய கலாச்சாரம் வேறு; நம்முடைய கலாச்சாரம் வேறு. அவர்களுடைய கலாச்சாரம் படிக்காதே என்று சொல்வது; நம்முடைய கலாச்சாரம் படி, படி, படி என்று சொல்வது.
அவர்களுடைய கலாச்சாரம் பெண்களைப் படிக்கக் கூடாது என்று சொல்வது.
‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’’
ஜாதியை ஒழித்து, சமத்துவத்தை உருவாக்கவேண்டும் என்று சொல்வது நம்முடைய கலாச்சாரம்.
ஆனால், சமஸ்கிருத கலாச்சாரம் என்பது பேதத்தி லேயே வாழக்கூடியது.
எம்மொழி செம்மொழி, தமிழ்மொழி – இதில் மும்மொழிக்கு இடமேயில்லை!
ஆகவேதான், அடிப்படையிலேயே தமிழ் மொழி சிறப்பானது என்றார். அந்த மொழிக்கெல்லாம் சிறப்பை உண்டாக்கியவர், செம்மொழி தமிழ் என்று சொல்லும்போது, எம்மொழி செம்மொழி, தமிழ்மொழி – இதில் மும்மொழிக்கு இடமேயில்லை. மும்மொழி என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
ஏனென்றால், இன்றைக்குக் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு என்று சொல்லக்கூடிய ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் இருக்கிறது.
எதிர்காலத்தில் நம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடிய போராட்டம்!
ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், பெற்றோர்களே, தாய்மார்களே, கல்வியாளர்களே இந்த நாட்டில் கல்வியைத் தழைக்க வைப்பதற்காக நடக்கக்கூடிய போராட்டமே தவிர, இது வெறும் மொழிப் போராட்டம் அல்ல – இது ஒரு கட்சிப் போராட்டம் அல்ல – இது ஓர் இனப் போராட்டம் அல்ல – இது ஒரு தத்துவப் போராட்டம். எதிர்காலத்தில் நம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடிய போராட்டம்.
ஹிந்தியைவிட மோசமானது சமஸ்கிருதம்!
எனவேதான், ஹிந்திக்கு இங்கே இடமில்லை. ஹிந்தித் திணிப்பை என்றைக்கும் எதிர்ப்போம் என்று குரல் கொடுப்பது மட்டுமல்ல – ஹிந்தியைவிட மோசமானது சமஸ்கிருதம். அதைக் கொண்டு வருகிறார்கள். அந்தக் கலாச்சாரத்தை நாம் எதிர்ப்போம்.
பண்பாட்டுப் பாதுகாப்பின்மீது நடைபெறும் படையெடுப்பை எதிர்க்கின்ற போர்!
எனவேதான், இது மொழிப் போர் என்பதைவிட, பண்பாட்டுப் பாதுகாப்பின்மீது நடைபெறும் படையெடுப்பை எதிர்க்கின்ற போர்.
எனவே, போர்ச் சங்கு ஊதியாகிவிட்டது. அதில் நாம் வெற்றி பெறுவோம், வெற்றி பெறுவோம்!
அடுத்த கட்டமாக ரயில்வே நிலையங்களில் ஹிந்தி மொழிகூட இருக்காத கட்டத்தை ஒன்றிய அரசு உருவாக்குகிறது.
‘‘தேன்கூட்டின்மீது கல்லெறிகிறீர்கள்’’
அழகாகச் சொன்னார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ‘‘தேன்கூட்டின்மீது கல்லெறிகிறீர்கள்’’ என்று.
கல்லெறிவதைவிட, அவர்கள் கை வைத்திருக்கிறார்கள். தேன் இனிமையானதுதான். ஆனால், தேனீக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யும்? என்று உங்களுக்குத் தெரியும்.
உழைப்புத் தேனீயாக இருப்பவர்தான் எங்களுடைய முதலமைச்சர். அதேபோலத்தான் இந்தக் கூட்டம். அதேபோலத்தான் தி.மு.க. அணி.
அவர்கள் தோண்டிய குழியில், அவர்களே புதையுண்டு போவார்கள்!
இந்த அணியை நீங்கள் அசைத்தோ, ஆட்டியோ பார்க்க முடியாது. சில பேர் புரியாமல் சொல்கிறார்களே, அசைப்போம், ஆட்டிப் பார்ப்போம் என்று சொல்வது இருக்கிறதே, அவர்கள் தோண்டிய குழியில், அவர்களே புதையுண்டு போவார்கள். இதுதான் கடந்த கால நீதிக்கட்சி வரலாறு.
ஒழிப்போம், ஒழிப்போம்!
ஆதிக்கத்தை ஒழிப்போம்!
மொழித் திணிப்பு ஆதிக்கத்தை
ஒழிப்போம்!
என்று சொல்லக்கூடிய உணர்வோடு ஒவ்வொருவரும் வீட்டிற்கு வீடு இந்தப் பிரச்சாரத்தைச் செய்யவேண்டும்.
தேர்தலைப்பற்றி சொன்னார்கள். இப்போது இதன்மூலமாக என்ன செய்திருக்கின்றீர்கள் என்றால், ஒற்றுமைப்பட வேண்டிய இயக்கங்களையெல்லாம் ஒற்றுமைப்படுத்தி விட்டீர்கள்.
அடுத்தகட்டம், இப்போது தேர்தல் வந்தாலும்கூட, நீங்கள் தனித்துவிடப்படுவீர்கள்.
உங்கள் கடைசி அத்தியாயத்தை நீங்கள் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்!
எனவேதான், உங்கள் முடிவை, உங்கள் கடைசி அத்தியாயத்தை நீங்கள் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். அதில் வேண்டுமானால் நீங்கள் வெற்றி பெறலாம்.
கடைசி அத்தியாயத்தை, காவிக் கட்சியை நீங்களே துடைத்தெறிகிறீர்கள். தமிழ்நாட்டில் இனி காவிக்கு இடம் இல்லை என்று ஒவ்வொரு இளைஞரும் தானே தன்னிச்சையாகக் கிளம்பக்கூடிய அளவிற்கு உணர்வுகளை உண்டாக்கி இருக்கிறீர்கள்.
எம் பண்பாட்டைக் காப்பாற்ற எதையும் இழப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்!
எனவே, மும்மொழி தேவையில்லை; எம்மொழி செம்மொழி. என்றைக்கும் அதைக் காப்பாற்றுவோம். எம் பண்பாட்டைக் காப்பாற்றுவோம். அதற்காக எதையும் இழப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
அதற்குத் தயார்! தயார்!! தயார்!!! என்ற உணர்வோடு நிறுத்துகிறோம்.
இந்தப் போராட்டம் என்பது முடிவல்ல – இதுதான் தொடக்கம்.
பந்து உங்கள் கைகளில் இருக்கிறது; எங்கள் தோட்டத்தில் பந்து இல்லை என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.
அதை என்ன செய்யவேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
மக்கள் உங்களுக்குத் தரவேண்டிய பாடத்தைக் கற்றுத் தருவார்கள்!
மக்கள் உங்களுக்குத் தரவேண்டிய பாடத்தைக் கற்றுத் தருவார்கள். அதற்காக நாங்கள் எங்களை அழித்துக் கொள்ளவும் தயாராக இருக்கின்றோம். அழித்துக் கொண்ட வரலாற்றின்மீதுதான் வெற்றிப் பதாகை வேகமாக கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.