மும்பை, மார்ச் 3 பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவராக இருந்த மாதவி புரி புச் மீது வழக்கு பதிவு செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பங்குச் சந்தை விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஊழல் தடுப்புசிறப்பு நீதிமன்ற நீதிபதி சசிகாந்த் ஏக்நாத்ராவ் பங்கர் 1.3.2025 அன்று பிறப்பித்த உத்தரவு: தவறு நடந்திருப்பது முதல்கட்ட ஆதாரங்களில் தெளிவாக தெரிகிறது. எனவே, மாதவி புரி புச், 5 அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்பு அமைப்பு (ஏசிபி) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். இந்த விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும். 30 நாட்களுக்குள் ஏசிபி தனது நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தனது தரப்பு வாதத்தை முன்வைக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை என கூறியுள்ள செபி, இந்த உத்தரவுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை
நிதிநிலை அறிக்கையுடன் தாக்கல் செய்ய முடிவு
சென்னை, மார்ச் 3 தமிழ் நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை, பேரவையில் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் அதே நாளில் (மாா்ச் 14) வெளி யிடப்படவுள்ளது.
ஒன்றிய அரசின் நடை முறையில் பொருளாதார ஆய்வறிக்கை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப் படுவதற்கு ஒருநாள் முன்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். ஆனால், தமிழ்நாட்டில் நிதிநிலை அறிக்கை தாக்கலுடன் அமா்வு தொடங்குகிறது. இதனால் பொருளாதார ஆய்வறிக்கை பொதுமக்களுக்கு நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்பாக கிடைக்க வாய்ப்பில்லை. கேரளம், கருநாடகம் மற்றும் ஆந்திரம் உள்ளிட்ட தென்மாநிலங்களிலும் இத்தகைய முறை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு தனது முதல் பொருளாதார ஆய்வறிக்கையை வரும் மாா்ச் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் போது வெளியிடப்படவுள்ளது. இதில் தமிழ்நாட்டின் பொருளாதாரப் போக்கு, பொதுநிதி, வறுமை, வேலைவாய்ப்பு மற்றும் நிலையான வளா்ச்சி இலக்குகள் குறித்த விவரம் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.