சென்னை,மார்ச் 3- ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 41 லட்சத்து 38 ஆயிரம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கடந் த 2022ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘நான் முதல்வன்’ எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு, தொழில்துறை பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் தகவல் தொழில் நுட்பம், பசுமை எரிசக்தி, மொழி சார்ந்த தகவல் தொடர்பு திறன்கள், நிர்வாகம், கணினிப் பயிற்சி உள்பட பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல், மொழித் திறன், கணினி திறன்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த திறன்கள் கொண்ட திறன் பயிற்சிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 பல்கலைக்கழகங்களுடன் இணைந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
அதேநேரம், உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது குறித்த பயிற்சிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு கடந்த 1ஆம் தேதியுடன், 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த 3 ஆண்டுகளில், 41 லட்சத்து 38 ஆயிரத்து 833 மாணவர்களுக்கு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சிகள் வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.
இதில், பொறியியல் மாணவர்கள் 10 லட்சத்து 91 ஆயிரத்து 22 பேருக்கும், கலை மற்றும் அறிவியல் கல்வி மாணவர்கள் 25 லட்சத்து 63 ஆயிரத்து 235 பேருக்கும், பாலிடெக்னிக் மாணவர்கள் 3 லட்சத்து 77 ஆயிரத்து 235 பேருக்கும், அய்.டி.அய். (தொழிற்கல்வி) மாணவர்கள் 1 லட்சத்து 7 ஆயிரத்து 341 பேருக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.