சென்னை, மார்ச் 2- அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எம்ஆர்பி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஒரு மணி நேரம் தமிழ் மொழி தகுதி தேர்வும் (10-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் அடிப்படையில்), 2 மணி நேரம் கணினி வழியில் மருந்தியல் தேர்வும் நடைபெறும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணமாக எஸ்சி, எஸ்சி-ஏ, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.500, மற்றவர்களுக்கு ரூ.1,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பு, ஊதியம், இணையத்தில் விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புடன் பி.எட். முடித்தால் ஆசிரியராகலாம்
தமிழ்நாடு அரசு அனுமதி
சென்னை, மார்ச் 2– பி.இ. பட்டத்துடன் பி.எட். முடித்தவா்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிவதற்கு தகுதியானவா்கள் என்று உயா் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து உயா் கல்வித் துறைச் செயலா் கே.கோபால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.டெக்., எலக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பானது வேலைவாய்ப்பு வகையில் பி.இ. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புக்குச் சமமானது.
இதேபோல், பி.இ. படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றவா்கள் பி.எட். (இயற்பியல் அறிவியல்) முடித்திருந்தால் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக (இயற்பியல்) பணிபுரியலாம். அந்த ஆசிரியா்கள் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பாடங்களைப் பயிற்றுவிக்கத் தகுதியானவா்களாவா் என அதில் கூறப்பட்டுள்ளது.
கடனை திருப்பிச் செலுத்திய பிறகும்
ஆவணங்களை வழங்காத வங்கிக்கு
ரூ.60 ஆயிரம் அபராதம் விதிப்பு!
சேலம், மார்ச் 2- கடனை திருப்பி செலுத்திய பிறகும் அசல் ஆவணங்களை வழங்காத வங்கிக்கு ரூ. 60 ஆயிரம் அபராதம் விதித்து சேலம் நுகா்வோா் குறைதீா் ஆணையம் தீா்ப்பு வழங்கியுள்ளது.
சேலம், ஓமலூரை அடுத்த பன்னப்பட்டி சக்கர செட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் மணி. விவசாயியான இவா், கடந்த 1993 ஆம் ஆண்டு டிராக்டா், டிரில்லா் வாங்குவதற்காக ஓமலூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ. 1 லட்சத்து 69 ஆயிரம் கடன் வாங்கினாா். இதற்காக விவசாய கிரய பத்திர அசல் ஆவணங்களை வங்கியில் கொடுத்திருந்தாா்.
வாங்கிய கடனை முறையாக செலுத்தி வந்த நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக மாதாந்திர தவணை தொகை செலுத்தவில்லை. இதையடுத்து, வங்கி சாா்பில் மேட்டூா் சாா்பு நீதிமன்றத்தில் கடனை வசூலிக்கும் வகையில் வழக்குத் தொடா்ந்தனா்.
இதையடுத்து கடந்த 2005 இல் 2 தவணையாக ரூ.14 லட்சத்தை கடன், வட்டியுடன் சோ்த்து வங்கியில் செலுத்திய மணி, தனது அசல் கிரய பத்திர ஆவணங்களைக் கேட்டுள்ளாா். ஆனால், வங்கி அதிகாரிகள், ஆவணங்களைக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்தனா்.
மேலும், சேலம் மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு குழு மூலம் வங்கிக்கு கடிதம் அனுப்பியும் ஆவணங்களை விவசாயிடம் கொடுக்கவில்லை. இதையடுத்து, தமிழ்நாடு நுகா்வோா் குழுக்களின் கூட்டமைப்பின் தலைவா் வழக்குரைஞா் அசோகன் மூலம் சேலம் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நேரத்தில் வங்கி நிா்வாகம், புகாா்தாரா் மணியை அணுகி அசல் ஆவணங்களை திரும்ப கொடுத்தது.
ஆனாலும், வழக்கை விசாரித்த நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் கணேஷ்ராம், உறுப்பினா் ரவி ஆகியோா் வங்கியின் சேவை குறைபாட்டுக்காக புகாா்தாரருக்கு ரூ.30 ஆயிரம், மன உளைச்சலுக்காக ரூ. 20 ஆயிரம், வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ. 60 ஆயிரத்தை 2 மாதங்களுக்குள் விவசாயிடம் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் 9 சதவீத வட்டியுடன் மனுதாரருக்கு அபராதத்தை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனா்.