உலகத் தமிழர்களே தந்தை பெரியாரை சுவாசியுங்கள்! வியட்நாமில் நடந்த இரண்டாம் உலகத் தமிழர் மாநாட்டில் கழக பொதுச் செயலாளர் உரை!

viduthalai
5 Min Read

வியட்நாம், பிப். 28- உலக மக்களைப் போல் மானமும் அறிவும் உள்ள மக்களாக தமிழர்களை ஆக்கிடப் பாடுபட்ட தந்தை பெரியாரை ஒதுக்கிப் பார்க்காதீர்கள் என்றார் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன். அவர் ஆற்றிய உரை வருமாறு:

தமிழ் இனம் நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்பது போல் தமிழர்தாம் பண்டையவரலாற்றை திரும்பிப் பார்த்து அதிலிருந்து பெறவேண்டிய பாடங்களை பெறுவதற்காக தமிழர் பன்னாட்டு நடுவம் சார்பில் வியட்நாமில் இரண்டாவது உலகத் தமிழர் மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. கடந்த மாநாடு கம்போடியா நாட்டில் நடைபெற்றது. அடுத்த மாநாட்டை எகிப்தில் நடத்துவதாக டாக்டர் திருத்தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

அவரின் முயற்சிக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்

உலகம் முழுவதும் தமிழர்கள் 149 நாடுகளுக்கு மேல் வாழுகிறார்கள். தமிழர்கள் வாழாத நாடு இல்லை. அதேசமயம் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தத்துவ பேராசான் தந்தை பெரியார் 1929 ,1952 வாக்கில் மலேசியா மண்ணுக்கு சென்றார். தமது கருத்துக்களை மக்கள் மத்தியில் பறைசாற்றினார். அப்போது அவர் வலியுறுத்தியது. “இந்த மண்ணில் வந்து வாழக்கூடிய தமிழ் மக்கள் இந்த மண்ணைத்தான் சொந்த மண்ணாக கருதி இங்கேயே வாழ வேண்டும் மீண்டும் தமிழ்நாட்டுக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கக் கூடாது. எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் இந்த மண்ணிலேயே வாழுங்கள்” என்பதை உறுதிப்படுத்தி உரையாற்றினார்.

பெரியாரின் உரை அடித்தளமிட்டது

அவரின் உரையால் உந்துதல் பெற்ற தமிழர்கள் அங்கேயே நிலையாக வாழ முயன்றதன் விளைவு அவர்களின் அடுத்த தலைமுறை மிகவும் சிறப்பாக வாழக்கூடிய வாழ்க்கையை பெற்றிருக்கிறார்கள். தோட்டத் தொழிலாளர்களாக பெற்றோர் கஷ்டப்பட்டு இருக்கலாம். ஆனால் இன்றைய தலைமுறை வசதியோடும் வாய்ப்போடும் வாழ்கிறார்கள் என்றால் தந்தை பெரியாரின் பேச்சு தான் அதற்கு அடித்தளம் இட்டது. உலகம் முழுவதும் வாழக்கூடிய தமிழர்கள் தந்தை பெரியாரின் பகுத்தறிவு இனமான கருத்துக்களை மொழி உணர்வு கருத்துக்களை வாழ்வில் கடைப்பிடித்தால் இப்போது வாழும் வாழ்க்கையை காட்டிலும் மிகவும் சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும். பெரியாரைப் போல் மக்களோடு மக்களாக இருந்து கள அனுபவம் பெற்று மக்களுக்கு தொண்டாற்றிய தலைவர்கள் வெகு சிலரே. பெரியார் ஒப்பற்ற சிந்தனையாளர். மக்களை மாற்றுவதற்கு வழி காட்டுவதற்கு மக்களுக்கு தொண்டாற்றுவதற்கு என்று சுயமரியாதை இயக்கத்தை பின்னர் நீதி கட்சி மூலமாக அதன் தலைவராக இருந்து ஆற்றிய சூழலில் நீதிக்கட்சிக்கும் இரண்டும் இணைந்த தேர்தல் முறையில் ஈடுபடாத சீர்திருத்த புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் மூலமும் உழைத்தார்…. பாடுபட்டார்… தொண்டாற்றினார். மக்களின் பிரச்சினைகளை மக்களோடே பயணித்து கள அனுபவம் பெற்றார். மக்களைத் திரட்டி உரிமைக்காக போராடி வெற்றியும் பெற்றார்.

பெரியாரை ஒதுக்கிப் பார்க்காதீர்கள்

மேல்நாடுகளில் பல உயிர்களை காவு கொடுத்து ரத்தம் சிந்தி பெற்ற உரிமைகளை இழப்புகள் இன்றி தமது தொண்டர்களின் ஈகத்தின் மூலமாக அமைதியான வழியில் பெற்றுக் கொடுத்தார். இந்த சாதனை தந்தை பெரியாரால் மட்டுமே முடிந்தது. மேல்நாடுகளில் மொழி உரிமைக்காக நாட்டின் விடுதலைக்காக பொருளாதார சமத்துவத்துக்காக என்று கட்சிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால் நம் நாட்டிலோ சுயமரியாதைக்காக என்று இயக்கத்தை தொடங்கியவர் பெரியார் மட்டுமே. உலகிலேயே மான உணர்ச்சியை அடிப்படையாக வைத்து இயக்கம் தொடங்கியவர் யார். அவரும் அவரின் தொண்டர்களும் அதிகபட்ச தியாகத்தை மக்களின் நல்வாழ்வுக்காக செய்துள்ளனர் என்பதை இங்கே வந்துள்ள பெருமக்கள் நினைவு கூற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். கடவுள் மறுப்பை மத எதிர்ப்பை ஜாதி ஒழிப்பை பெண் விடுதலையை மட்டுமே வைத்து பெரியாரை ஒதுக்கி பார்க்காதீர்கள்.

பெரியாரின் மனிதத் தொண்டு

உலகின் மற்ற எந்த தலைவர்களுக்கும் பெரியார் குறைந்தவர் இல்லை. பொது வாழ்வில் தூய்மை ஒழுக்கம் நேர்மை வாய்மை இவற்றை கடைபிடித்தவர். இன்னும் சொல்லப்போனால் எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் திருக்குறள் இந்த திருவள்ளுவரின் நீட்சியாக, ஜாதியும் மதமும் சமயமும் பொய்யென உரைத்தும் கலை உரைத்த கற்பனை எல்லாம் நிலையென கொண்டாடும் கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண்மூடி போகட்டும் என்று பறைசாற்றிய வள்ளலாரின் நீட்சியாக பெரியார் மனித தொண்டு ஆற்றினார். மனித மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தினார். மக்களை சிந்திக்க தூண்டினார். மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று மனிதநேயம் போற்றினார். அவரைப் போல் ஒரு தலைவர் மேல்நாட்டு மக்களுக்கு கிடைத்திருப்பார் எனில் அந்த மக்கள் தூக்கி வைத்து கொண்டாடி இருப்பார்கள்.. ஆனால் நாமோ அப்படி கொண்டாடாவிட்டாலும் பரவாயில்லை… இழிவு படுத்தாமல் இருந்திருக்கலாம்… ஓய்வு என்பதும் சோம்பல் என்பதும் தற்கொலைக்குச் சமமானது என்று சொல்லி எழுபது ஆண்டுகளுக்கு மேலாக மனித தொண்டு ஆற்றிய மாமேதை அவர்.

பெரியாரை உலக மயமாக்க உழைத்திடும் ஆசிரியர்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் வழியில் இன்றும் பெரியாரை உலகு மயம் படுத்திட உலகை பெரியார் மயமாக்கிட ஓயாது உழைத்து வரும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் பிரதிநிதியாக உங்கள் முன்னால் நான் நிற்கிறேன்.. பேசுகிறேன். உலகத்தின் பல்வேறு நாடுகளில் ஓராண்டுகளுக்கும் மேலாக பயணம் செய்து மக்களை மக்களின் வாழ்வாதாரத்தை வாழ்வியலை நேரிலே ஆய்வு செய்து உலக மக்களைப் போல் மானமும் அறிவும் உள்ள மக்களாக திராவிடர்களை தமிழர்களை ஆக்குவதே தம்முடைய பணி என்று சொல்லி உழைத்தவர் பெரியார். அவரின் கொள்கை பாதையில் உலகத் தமிழர்களே வாழ முயலுங்கள் என்று தமது தொடக்க உரையில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

மாநாட்டில் எழுச்சித் தமிழர் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன் சிறப்புரையாற்றினார். மற்றும் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், பேராசிரியர் உலகநாயகி, பேராசிரியர் ரவி, இலங்கை வானொலியின் மேனாள் முன்னணி வர்ணனையாளர் அப்துல் ஹமீத் ஆகியோர் முக்கிய உரையாற்றினர். பன்னாட்டு தமிழர் நடுவம் நிறுவனர் டாக்டர் திருத்தணிகாசலம் தலைமை தாங்கினார். இலங்கை, தென்னாப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, மாலத்தீவு, மலேசியா, சிங்கப்பூர், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *