பாராட்டத்தக்க நியமனம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகிறார் ஆய்வாளர் பாலகிருஷ்ணன்

viduthalai
1 Min Read

சென்னை,பிப்.27- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற அய்ஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வு

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற அய்ஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வுகளுக்கு புதிய உந்துதலை அளிக்கும். பாலகிருஷ்ணன் ஒரு புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞரும், ஆட்சிப்பணி வல்லுநரும் ஆவார்.

தமிழ் இலக்கியத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்களைப் பெற்ற இவர், தமிழில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதி வென்ற முதல் தமிழ் மாணவர். ஆய்வாளர், படைப்பாளர் என்ற இரு தளங்களில் செயல்படும் இவர் 15 நூல்களின் ஆசிரியர். சிந்துவெளிப் பண்பாட்டு தொல்லியல் தரவுகளை சங்க இலக்கியங்கள் மற்றும் தமிழ்நாட்டு அகழாய்வுத் தரவுகளுடன் ஒப்பிட்டு இவர் எழுதியுள்ள ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்திய ஆட்சிப் பணியில் 1984ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஒடிசா அரசிலும், தேர்தல் ஆணையத்திலும் 34 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர். திராவிட மொழிக்குடும்பத்தின் பரவல், சிந்து சமவெளிப் பண்பாடு, தொல்தமிழ்த் தொன்மங்கள், சங்க இலக்கியங்கள் மற்றும் திருக்குறள் குறித்த இவரது செயல்பாடும் பங்களிப்பும் உலகத்தமிழர்களால் பாராட்டப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *