வருகிற 4ஆம் தேதி தொடங்கி 2 நாள் நடக்கிறது
புதுடில்லி, பிப்.27- இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் கடந்த வாரம் பொறுப்பேற்றார்.
இதனைத் தொடர்ந்து அவர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடுவதற்காக ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த மாநாடு அடுத்த மாதம் (மார்ச்) 4ஆம் தேதியும், 5ஆம் தேதியும் டில்லியில் நடக்கிறது.மாநாடு டில்லியில் உள்ள இந்திய பன்னாட்டு ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் நடைபெறும். மாநாட்டில் ஒரு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஒரு வாக்காளர் பதிவு அதிகாரியையும் பங்கேற்க தலைமை தேர்தல் அதிகாரிகள் பரிந்துரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாட்டில் இவர்கள் பங்கேற்பது இது முதல்முறை ஆகும். ஏனெனில் அவர்கள் மாவட்ட மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் முக்கியமான செயல் பாட்டாளர்களாக உள்ளனர்.
இந்த 2 நாள் மாநாடு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேர்தல் அதிகாரிகள் ஒருவருக்கொருவர் அனுபவ ரீதியாக மேலும் கற்றுக்கொள்வதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது.
மாநாட்டின் முதல் நாளில், தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு, பயனுள்ள தொடர்பு, சமூக ஊடக அணுகலை மேம்படுத்துதல் மற்றும் தேர்தல் செயல்முறைகளில் பல்வேறு செயல் பாட்டாளர்களின் சட்டப்பூர்வ பங்கு உள்ளிட்ட நவீன தேர்தல் மேலாண்மையின் முக்கிய பகுதிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
மாநாட்டில் 2ஆவது நாளில், முந்தைய நாளின் கருப்பொருள் விவாதங்கள் குறித்த செயல் திட்டங்களை அதிகாரிகள் முன்வைக்கிறார்கள். இந்த தகவல்களை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.