கருஞ்சட்டை
கேள்வி: அரசியலும், ஆன்மிகமும் சேரும் வாய்ப்பு எப்போது வரும்?
பதில்: ஆன்மிக அரசியல் என்பது காந்தி கூறிய நெறிமுறைகளைக் கொண்ட அரசியல். அதைத் தொலைத்தது காங்கிரஸ். அதைத் திரும்பக் கொண்டு வர முயல்கிறது பா.ஜ.க. ஆன்மிகம் இல்லாத அரசியல் வியாபாரம். அதைச் செய்தது காங்கிரஸ். ஆன்மிக எதிர்ப்பு அரசியல் திராவிடம். அது மோசடி. இன்று அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அது மாறினால்தான் ஆன்மிக அரசியல் திரும்பலாம்.
(‘துக்ளக்‘, 5.3.2025, பக்கம் 14)
திருவாளர் குருமூர்த்தி அய்யர், தனது குருநாதர் என்று பெருமையாகக் கூறிக் கொள்ளும் திருவாளர் சோ.ராமசாமி அரசியல், ஆன்மிகம்பற்றி என்ன சொல்லுகிறார்?
கேள்வி: அரசியல்வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? ஆன்மிகவாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? நடிகராவதற்கு என்ன தகுதி வேண்டும்?
சோவின் பதில்: அரசியல்வாதி ஆவதற்குப் பொய் சொல்லத் தெரியவேண்டும். ஆன்மிகவாதியாவதற்குப் பொய்யை அருள்வாக்காக மாற்றத் தெரிந்திருக்கவேண்டும். நடிகராவதற்கு உண்மையாகவே நடிக்கத் தெரியவேண்டும்.
(‘துக்ளக்‘, 26.10.2016, பக்கம் 23)
நமது பதிலடி:
குருவான ‘சோ’வின் கூற்றும், சீடரான குருமூர்த்தியின் கூற்றும் ஒத்துப் போகவில்லையே! ஒன்றுக்க்கொன்று கோதாவில் குதிக்கிறதே!
ஆன்மிக அரசியல் என்பது காந்தி கூறிய நெறிமுறைகளைக் கொண்ட அரசியல் என்கிறார் திருவாளர் குருமூர்த்திவாள்.
அப்படியானால், அந்த ஆன்மிக அரசியல்வாதி, காந்தியாரை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே என்ற பார்ப்பனர் யார்?
அவர் ஆன்மிகவாதியில்லையா?
கோட்சேவின் ஆன்மிகம் எந்த வகையைச் சார்ந்தது?
குருமூர்த்தி – ‘துக்ளக்’ வகையறாவைச் சேர்ந்த ‘தினமலரில்’ ஒரு செய்தி:
இசை விமர்சகர் என்று கூறப்படும் திருவாளர் சுப்புடு சென்னை சபாக்களில் நடைபெற்ற இசைக் கச்சேரி விமர்சனம் செய்த செய்திதான் அது. ‘தினமலரில்’ வெளிவந்ததுதான் (16.12.2003).
‘‘நமக்குள்ள இருப்பது போலி ஆசாரம், சிலதை புனிதம் இல்லன்னு தடை பண்ணி வச்சிருக்கோம். ஆன்மிகம் என்பதை நம்மைப் போல தப்பாய் புரிந்துகொண்டவர்கள் யாருமில்லை. ‘நேத்து மாலை முழுவதும் உனக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். நீ ஏன் வல்லை? என் தாபம் தாங்கல்லே!’ இப்படி ஒரு பாட்டு தெலுங்குல இருக்கு. அர்த்தம் தெரிஞ்சா தடை போட்டுடுவாங்க!
சேத்திரக்ஞர் பாட்டு ஒண்ணு இருக்கு. ‘‘கிருஷ்ணா! இப்ப வந்திருக்கிறே… போ… போயிடு…. அப்புறம் வா. என் புருஷன் வர நேரமிது!’’ என்று அர்த்தம் தெரிஞ்சு ஆடறாங்களா?
அஷ்டபதி ஒண்ணு இருக்கு.
தலைவி சொல்றா… ‘தாபம் அதிகமாயிட்டது. அவனைப் போய் இழுத்துக் கொண்டு வாடி’ என்கிறாள்.
தோழி போயிட்டு லேட்டா வாரா. ‘ஏன் தலை எல்லாம் கலைஞ்சிருக்கு?’ன்னு தலைவி தோழிக்கிட்ட கேட்கிறாள்!
‘காத்துல கலைஞ்சு போயிட்டுது’ன்னு பதில் சொல்றா தோழி.
ஜீவாத்மா, பரமாத்மாவை அடைய தாபத்துல துடிக்கிறது என்பதெல்லாம் மழுப்பலாகத்தான் தோன்றது…’’ (‘தினமலர்’, 16.12.2003).
ஆன்மிகம் எப்படி இருக்குதுன்னு பாத்தேளா?
ஜீவாத்மா, பரமாத்மாவை அடைவது என்று பேஷா தாளம் தட்டிப் பேசுறாளே, அது என்னான்னு பஷ்டமாக தெரிஞ்சிப் போச்சே!
அந்தோ பாவம்! ‘துக்ளக்’ குருமூர்த்தி அய்யர்வாள்கள்!