சென்னை, பிப். 25- தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை இங்கிலாந்து அரசும் செயல்படுத்த உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் முதற்கட்டமாக 750 பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாணவர்களின் வருகையை அதிகரிப்பதற்காகவும், வறுமையை ஒழிப்பதற்கான ஒரு முயற்சியாகவும் இதை கையில் எடுத்துள்ளது அந்நாட்டு அரசு. தமிழ்நாட்டில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் கடந்த 2022 செப். மாதம் தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டை பின்பற்றி தெலங் கானா உள்ளிட்ட மாநிலங்கள் தங்களது பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகம் செய்தன. தமிழ்நாட்டின் காலை உணவுத்திட்டத்தை ஏற்கனவே கனடா அரசும், தங்களது நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் தொடங்கிய காலை உணவுத் திட்டம் இந்தியா வில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், தற்போது வெளிநாடுகளிலும் நடை முறைப்படுத்தப்படுவது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும் என திமுகவினர் கூறி வருகின்றனர்.