வாசிங்டன்,பிப்.25- அமெரிக்காவில் யு.எஸ்.எய்டு அமைப்பின் 2 ஆயிரம் ஊழியர்களை அதிபர் டிரம்ப் பணிநீக்கம் செய்தார்.
அமெரிக்க அதிபராக பதவி யேற்ற டிரம்ப், செலவினங்களை குறைத்து, அரசின் செயல்திறனை மேம்படுத்த டி.ஓ.ஜி.இ., எனும் துறையை உருவாக்கியுள்ளார். இந்த துறையின் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளார். இந்த அமைப்பு வெளிநாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியுதவிகளை முழுமையாக நிறுத்தியுள்ளது.
பணிநீக்கம்
யு.எஸ்.எய்டு அமைப்பு பன்னாட்டு அளவில் மனிதாபிமான அடிப்படையிலான ஆன பணிகளுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் உதவி செய்கிறது. இதற்கான நிதி முழுவதும் அமெரிக்க அரசால் வழங்கப்படுகிறது. இந்த அமைப்பின் ஆண்டு பட்ஜெட் நான்கு லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் (50 பில்லியன் டாலர்). தற்போது இந்த அமைப்புக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் சூழல் ஏற்பட்டது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்த்து ஊழியர்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த வாசிங்டன் நீதிமன்றம், நிதியுதவி நிறுத்தும் உத்தரவுக்கு தடை விதித்தது. பின்னர், வாசிங்டன் தலைமை நீதிபதி கார்ல் நிகோலஸ், இந்த தடையை நீக்கி உத்தரவிட்டார். தடை நீக்கப்பட்ட உத்தரவு வந்த நிலையில், 2 ஆயிரம் ஊழியர்களை அதிபர் டிரம்ப் பணிநீக்கம் செய்தார்.
2 ஆயிரம் ஊழியர்கள்
இது குறித்து டிரம்ப் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்க பன்னாட்டு மேம்பாட்டு நிறுவனத்தில் (யு.எஸ்.எய்டு) 2,000 பதவிகள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் 2 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். முக்கிய பதவிகளில் உள்ள ஒரு சிலரை தவிர மற்ற அனைவரைக்கும் விடுப்பு வழங்கப்பட்டு உள்ளது’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
யு.எஸ்.எய்டு அமைப்பின் 2 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு
Leave a Comment