திருச்சி, பிப். 25- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மழலையர் பிரிவின் யூ.கே.ஜி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் பிரீ.கே.ஜி முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கலைத் திருவிழா ஆகிய இருபெரும் விழாவானது, பள்ளி வளாகத்தில் உள்ள என்.எஸ்.கலைவாணர் அரங்கில் 22/02/2025 (சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
பள்ளி முதல்வர் முனைவர்.க.வனிதா முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, மதுரை உயர்நீதிமன்ற நீதிபதியின் நேர்முக உதவியாளரும், தமிழ்நாடு அரசின் தூயத்தமிழ்ப் பற்றாளர் விருது பெற்றவருமான, டி.இராஜபிரபா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் பள்ளியின் மழலையர் பிரிவு ஆசிரியை எஸ்.கவுரி வரவேற்புரை வழங்கினார்.
பள்ளியின் மழலையர் பிரிவின் பிரீ.கே.ஜி மற்றும் எல்.கே.ஜி மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் பட்டமளிப்பு மற்றும் கலைத் திருவிழா சிறப்பாகத் தொடங்கியது.
1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் மற்றும் நடனங்கள் நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவில் யூ.கே.ஜி பயிலும் 59 மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் டி.இராஜபிரபா பட்டச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்து, மாணவர்களுக்கான உறுதிமொழியை அவர் வாசிக்க அதனைக் கடைப்பிடிப்பதாக தங்கள் மழலை மொழியில் மாணவர்கள் சொல்லியது பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சிறப்பு விருந்தினர், தனது சிறப்புரையில், கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்படும் பட்டமளிப்பு விழாவை மட்டுமே பார்த்திருந்த தனக்கு, அதைவிட நேர்த்தியான முறையில் நடத்தப்படும் இந்த விழா மிகுந்த வியப்பைத் தருவதோடு, இந்த நிகழ்வில் தான் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
மாணவர்களின் திறமைகளை வெளிக் கொணரும் இது போன்ற நிகழ்வுகளுக்குப் பக்கபலமாக இருக்கும் பள்ளி நிர்வாகம், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்கி, அவர்களோடு மனம் விட்டுப் பேசினாலே பல்வேறு பிரச்சனைகள் ஆரம்பத்திலேயே தடைபட்டு விடும் என்று கூறி, அலைபேசியை அனைத்து வைத்து விட்டு உங்கள் பிள்ளைகளை அரவணைத்து வழி நடத்துங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
பள்ளியின் மழலையர் பிரிவு ஆசிரியை ஜே.ஹெலன் மேரி நன்றியுரை வழங்க, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. இளங்கலை ஆசிரியர்கள்டி.நளினி மற்றும் கே.ஜெயசுதா ஆகியோர் சிறப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.