மதுரை, பிப். 25- மதுரை திராவிடர் கழக பகுதிக் கழகத் தலைவர் சோ.சுப்பையா-
சு.சித்ரா இல்லத்தின் வாழ்விணையர் ஏற்பு விழா 23.2.2025 அன்று காலை 10 மணி அளவில் மதுரை விராட்டிபத்தில் உள்ள கணபதி சுப்பிரமணியர் மகாலில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையேற்றார். .விழாவின் தொடக்கத்தில் அனைவரையும் வரவேற்று தலைமைச் செயற்குழு உறுப்பினர் மதுரை வே.செல்வம் உரையாற்றினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் பா.காசி, மாவட்ட இளைஞரணி தலைவர் எ.செல்வம்,பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில அமைப்பாளர் பேரா.சி. மகேந்திரன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் சுப.முருகானந்தம், மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு ஆகியோர் கருத்துரை வழங்கினர். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராஜா ,சுவாமி வி.சொக்கலிங்கம், மாவட்ட கழகத் தலைவர் அ. முருகானந்தம், மாவட்ட கழகச் செயலாளர் இரா.லீ சுரேஷ், திருநெல்வேலி மாவட்ட கழகத் தலைவர் இராஜேந்திரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
கவிஞர் கலி.பூங்குன்றன் வாழ்த்துரை
திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியைச் சார்ந்த ஓ.மும்மூர்த்தி-மு. திரிபுரசுந்தரி ஆகியோரின் மகன் மு.மணிகண்டன், சோ. சுப்பையா,சு.சித்ரா ஆகியோரின் மகள் சி.சு.மணியம்மை ஆகியோருக்கு நடைபெற்ற வாழ்க்கை இணையேற்பு விழாவை கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நட்த்தி வைத்து உரையாற்றுகையில், தான் சுப்பையாவிற்காகவே இன்றைக்கு மதுரைக்கு வந்ததாகக் குறிப்பிட்டார். எளிய தோழர்.குற்றாலம் பயிற்சி முகாமில் ஆண்டுதோறும் சமையற்பணியை ஏற்றுக்கொண்டு செய்பவர்.உழைப்பால் உயர்ந்தவர்.எளிய முறையில் கவர் தொழில் தொடங்கி இன்றைக்கு தொழில் அதிபராகத் திகழ்பவர் என்று அவரையும், அவரது இணையர் சித்ராவையும் பாராட்டினார்.
சுயமரியாதைத் திருமணங்கள்
தந்தை பெரியார் முதன் முதலில் சுயபரியாதைத் திருமணத்தை ஆரம்பித்த வரலாறு மற்றும் பார்ப்பன மந்திரங்களின் இழிவுத் தன்மையை அவர்கள் எழுதிய நூலைக் கொண்டு கூடியிருந்த பொது மக்களுக்கு கவிஞர் அவர்கள் விளக்கினார். ஆணும் பெண்ணும் இணைந்து வாழக்கூடிய இந்த வாழ்க்கையில் மூன்றாவது நபர் தலையீடு எதற்கு என்று கேட்டவர் தந்தை பெரியார் என்றார்.சிக்கனமாகத் திருமணங்களை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியவர் தந்தை பெரியார். கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இது மாதிரியான ஆயிரக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார் எங்கள் வீட்டிலேயே 38 சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்று இருக்கின்றன 17 திருமணங்கள் தந்தை பெரியாரே நடத்தி வைத்தவை.
மற்றவை அன்னை மணியம்மையார் அவர்களும், தமிழர் தலைவர் அவர்களும் நடத்தி வைத்த திருமணங்கள் என்றார். 1968 இல் எனக்குத் தந்தை பெரியார் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்தார். நானும் எனது இணையர் வெற்றிச்செல்வியும் மிகச் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்ன குறைந்து விட்டோம் எனக்கேட்டார். எனது இரண்டு பெண்களும் உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள் எனது மருமகன் குணசேகரன் ஊடகத்துறையில் பெரிய பொறுப்பில் இருக்கிறார் சுயமரியாதைத் திருமணங்கள் செய்து கொண்டவர்கள் எந்த வகையிலும் குறைந்து போய்விடவில்லை என்பதைச் சொல்வதற்காக இதைச் சொல்கி றேன் என்று குறிப்பிட்டார்.
சட்டப்படி செல்லுபடியாகும்
திருமண வீடுகளில் பெண்கள் நீங்கள் நிறைய கூடி இருக்கிறீர்கள் .உங்கள் மத்தியிலே சில செய்திகளைச் சொல்வதற்கான வாய்ப்பாக நாங்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்கின்றோம் இன்றைக்கு எங்களைப் போன்றவர்கள் சுருக்கமாகப் பேசுகிறோம். ஆனால் தந்தை பெரியார் அவர்கள் ஒரு திருமணத்தில் ஐந்தரை மணி நேரம் பேசி இருக்கிறார். நினைத்துப் பாருங்கள். தந்தை பெரியார் அவர்கள் அய்ந்தரை மணி நேரம் பேசியிருக்கிறார் என்று சொன்னால் அவ்வளவு நேரமும் மக்கள் கேட்கக் கூடிய அளவிற்கு தொய்வு இல்லாமல் உண்மையை விளக்கக் கூடிய வகையில் தந்தை பெரியார் பேசியிருக்கிறார் அய்யா பேசியிருக்கிறார். மக்கள் கேட்டிருக்கிறார்கள் இது ஒரு மிகப்பெரிய வரலாறு. எனவே சுயமரியாதைத் திருமணம் என்பது மக்களுக்கு விழிப்புணர்வை கொடுக்கக்கூடிய மேடை. அறிஞர் அண்ணா அவர்கள் 1967இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்று சட்டம் செய்தார். அதற்கு முன்னால் 1928 முதல் ஏறத்தாழ 40 ஆண்டுகள் ஆயிரக்கணக்கான பேர் சட்டத்தைப் பற்றிக் கவலைப் படாமல் தந்தை பெரியார் தலைமையில் திராவிட இயக்க தலைவர்கள் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார்கள். சட்டமா? கொள்கையா? என்று வந்த பொழுது கொள்கையே முதன்மை என்று காட்டியவர்கள் திராவிடர் இயக்கத்தவர்கள்.
பெற்றோரை மதியுங்கள்
இன்றைக்கு மணமக்கள் மணிகண்டன், மணியம்மை அவர்களும் நிறையப் படித்திருக் கிறார்கள். பட்டம் பெற்று இருக்கிறார்கள் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எல்லாத் திருமண வீடுகளிலும் ஒரு செய்தியைச் சொல்லுவார் மணமக்களே உங்கள் பெற்றோர் மீது அன்பு செலுத்துங்கள். அவர்கள் மனம் கோணாமல் நடந்து கொள்ளுங்கள். அவர்களைப் பாதுகாத்துக் காட்டுங்கள் என்பதுதான் அவர் சொல்லக்கூடிய அந்த அறிவுரை. அதையே நானும் சொல்கிறேன். நீங்கள் உங்கள் பெற்றோர்களிடம் முழு அன்பைக் காட்டி அவர்களைப் போற்றுங்கள், அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி, இந்தச் சுயமரியாதைத் திருமணம் யார் தலைமையில் நடைபெற்றாலும் தந்தை பெரியார் தலைமையில் நடைபெறுவதாகப் பொருள்.
இந்தச் சுயமரியாதைத் திருமணம் யார் முன்னிலையில் நடைபெற்றாலும் அறிஞர் அண்ணா அவர்கள் முன்னிலையில் நடைபெறுவதாகப் பொருள் ஏனென்றால் இந்த திருமண முறையினைத் தோற்றுவித்தவர் தந்தை பெரியார். இதைச் சட்டப்படி செல்லுபடியாகும் என்று சட்டம் செய்தவர் அறிஞர் அண்ணா. எனவே அவர்களை நினைவில் வைத்து இவர்களை வாழ்த்துகிறோம் என்று சொல்லி மணமக்கள் இருவரையும் உறுதிமொழி ஏற்கச்செய்து அய்யா கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் இந்த வாழ்க்கை இணைநல ஏற்பு விழாவை நடத்தி வைத்தார்கள் முடிவாக திராவிடர் கழக மாவட்ட துணைச் செயலாளர் க.சிவா அவர்கள் நன்றி கூறினார். விராட்டிபத்து பகுதி முழுவதும் திராவிடர் கழகக் கொடி பறக்க,உறவினர்களாலும் திராவிடர் கழக, மற்றும் அனைத் துக் கட்சித் தோழர்களாலும் அரங்கம் நிரம்பி வழிய இந்த வாழ்க்கை இணையேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.