பரமக்குடி,பிப்.24- மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக மாணவிகளை பேச வைத்து காட்சிப் பதிவு வெளியிட்ட பாஜ பிரமுகர் மீது, மாணவியின் பெற்றோர் தரப்பில் காவல் துறையில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்ப்பு
மும்மொழி கல்விக்கொள்கையை அமல்படுத்தாத மாநிலங்களுக்கு நிதி கிடையாது என ஒன்றிய அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இக்கொள்கைக்கு தமிழ்நாடு அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இச்சூழலில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து பேசிய காட்சிப் பதிவு வைரலானது.
அந்த காட்சிப் பதிவில், ‘‘அரசுப் பள்ளி மாணவிகளாகிய எங்களுக்கு மும்மொழி கற்க உரிமை இல்லையா? ஏழை மாணவர்களாகிய எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்க அனுமதி தாருங்கள்’’ என்று பேசி உள்ளனர்.
பா.ஜ.க.வின் மோசடி
இந்த காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த மூன்று மாணவிகளில் இருவரின் தந்தையர் பாஜவில் இருப்பதாகவும் காலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்பாக, மாணவிகளை பேச வைத்து காட்சிப் பதிவு எடுத்ததாகவும் கூறப்பட்டது. காட்சிப் பதிவில் இருந்த ஒரு மாணவியின் தந்தை கூறுகையில், ‘‘பள்ளிக்கு வந்த எனது மகளை பாஜவை சேர்ந்த விபுதீஸ்வரன் என்பவர் மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பேச சொல்லி வாய் அசைக்க கூறியுள்ளார்.
தைரியம் இல்லை
பாஜ அரசு நேரடியாக மோத தைரியம் இல்லாமல் பள்ளிக் குழந்தைகளை வைத்து அரசியல் செய்கிறது. இந்த விவகாரத்தில் எனது மகளுக்கோ, எனக்கோ, பள்ளி ஆசிரியருக்கோ எந்தத் தொடர்புமில்லை. இந்த காட்சிப் பதிவை எடுத்தவர் பாஜவில் தெளிச்சாத்தநல்லூர் கிளைச் செயலாளர் ஆக உள்ளார். பள்ளி வளாகத்தில் காட்சிப் பதிவு எடுத்த விபுதீஸ்வரன் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் இது தொடர்பாக நான் காவல் துறையில் புகார் அளிப்பேன்’’ என்றார்.
இதனிடையே, பாஜவை சேர்ந்தவர்களின் மகள்கள் மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து பேசிய காட்சிப் பதிவிற்கும், எங்களது பள்ளி ஆசிரியர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மற்றொரு காட்சிப் பதிவையும் வெளியிட்டுள்ளனர்.