தமிழ்நாடு தாண்டியும்
மொழிப் பிரச்சினை
மராத்தி மொழியில் பேசவில்லை என்று சொல்லி கருநாடக அரசுப் பேருந்து நடத்துநருக்கு மகாராட்டிர இளைஞர்கள் தர்ம அடி கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்காவி என்ற நகர் கருநாடக மாநிலத்தில் இருந்தாலும், மகாராட்டிரா பார்டரில் இருப்பதால் அங்கு மராத்தி மொழி பேசுபவர்கள் அதிகம். அங்கிருந்து சுலேபவி சென்ற பேருந்தின் நடத்துநர் மராத்தி மொழி தெரியாது என்று சொன்னதற்காக தாக்கப்பட்டுள்ளார்.
கேரள பா.ஜ.க. தலைவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் மறுப்பு
தொலைக்காட்சி விவாதத்தில் இந்திய முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் எனக்கூறிய கேரள பாஜக தலைவர் பி.சி.ஜார்ஜுக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. இதே போன்ற வழக்கு ஒன்றில் கடந்த 2022இல் வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை மீறி, மீண்டும் அவதூறு கருத்துகளை தெரிவிக்கும் இவருக்கு முன்ஜாமீன் வழங்கினால், அது மக்களிடம் தவறான செய்தியை கொண்டு செல்லும் எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
ஆங்கிலம்தான் முக்கியம்: ரஜினி
திமுக – பாஜக இடையே மொழிப் பிரச்சினை பெரிதாக வெடித்திருக்கக் கூடிய சூழலில், ஆங்கிலம் குறித்து ரஜினி பேசிய காட்சிப் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர், ஆங்கிலம் கற்றுக்கொண்டால்தான் தொழிலில் முன்னேற முடியும் எனவும் அதுதான் வருங்காலம் என்றும் பேசுகிறார். மேலும், தமிழர்கள் முன்னேறினால்தான் அது தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.
‘அழகாக இருக்கிறீர்கள்’ என மெசேஜ் அனுப்பினால் சிறை
முன்பின் பழக்கமில்லாத பெண்ணுக்கு ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’ என்று மெசேஜ் அனுப்புவதும் ஆபாசமான செயலாக கருதப்படும் என மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2022இல் பெண் கவுன்சிலரை வர்ணித்து வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிய நபருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த மும்பை செஷன்ஸ் நீதிமன்றம், தீர்ப்பை உறுதி செய்ததோடு வழக்கை தள்ளுபடி செய்தது.