திருச்சி, பிப். 22- திருச்சி பெரியார் மருந்தி யல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் “ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இளைஞர்களின் பங்கு” என்னும் மய்யக்கருத்தை கொண்டு 12.02.2025 முதல் 18.02.2025 வரை பாச்சூர் – கடுக்காத்துரை கிராமத்தில் தொடர்ந்து ஒருவாரகாலம் நடைபெற்றது.
இச்சிறப்பு முகாமின் நிறைவுநாள் விழா பாச்சூர் – கடுக்காத்துரை கிராமத்திலுள்ள தந்தை பெரியார் இல்லத்தில் 18.02.2025 அன்று மாலை 6.45 மணியளவில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் பேராசிரியர் இர. சக்தி வரவேற்புரையாற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட மாணவி செல்வி க. பவித்ரா ஒருவார காலம் நடைபெற்ற சமுதாயப் பணிகளை முகாம் அறிக்கையாக வாசித்தார்.
பொமக்களுக்குப் பயன்
நிறைவுநாள் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியின் உதவி பேராசிரியர் மருத்துவர் சரோ தங்க சங்கீதா கிராம மக்கள் மத்தியில் நலவாழ்வு குறித்து சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் தந்தை பெரியார் கால்தடம் பதித்த தந்தை பெரியார் இல்லத்தில் நாட்டுநலப்பணித்திட்ட நிகழ்ச்சியின் மூலம் கலந்து கொள்வதில் பெருமையடைவதாகவும் ஒருவார காலம் பொதுமக்கள் பயனடையும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்கும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் கோடைக்காலம் துவங்க இருப்பதால் விவசாயிகள் அதிக நேரம் வெப்பத் தாக்கத்திற்கு உட்படுவதால் ஒரு நாளைக்கு 5 லிட்டர் குடிநீர் அருந்த வேண்டும். கோடைக்கால நோய்களை எதிர்கொள்ள அரசு பொதுமருத்துவமனைகள் தயாராக இருப்பதாகவும் அதனை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உரையாற்றினார்.
தூக்கம் கட்டாயம்
நெகிழி பயன்பாட்டை தவிர்ப்போம் என்ற உறுதிமொழியினை ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும் என்றும் மரக்கன்றுகளை அதிக அளவில் வீடுகளிலும் பொதுவெளிகளிலும் நட்டு வைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்கெடுக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். கிருமி தொற்றுக்களை தவிர்க்க கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்று கூறி கை கழுவுவதன் செயல்முறை விளக்கத்தை அளித்து விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கி சிறப்பித்தார். அவரைத் தொடர்ந்து விஜயலெட்சுமி கண் மருத்துவமனையின் மருத்துவர் பிரபாகரன் பார்வை குறைபாடுகளை போக்குவதற்கு வைட்டமின் ஏ சத்துள்ள கீரைகள், காய்கள் மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் ஏற்படாதவாறு ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேர தூக்கம் கட்டாயம் என்றும் அலைபேசி பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் உரையாற்றினார். பெரியார் மருந்தியல் கல்லூரியின் சார்பில் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை கிராமத்திற்கு அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்தை மேனாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மதி தனலெட்சுமி கண்ணனிடம் வழங்கி சிறப்பித்தார்.
மருத்துவ முகாம்கள்
பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு வழங்கிய மின் விளக்கை ப. ஆல்பர்ட் முதல்வரிடம் வழங்கி சிறப்பித்தார். திராவிடர் கழகம், ஊராட்சி மன்றம் மற்றும் பெரியார் பெருந்தொண்டர் நினைவில் வாழும் தர்மலிங்கம் அவர்களின் குடும்பத்தினர் சார்பாக பேராசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. கடுக்காத்துரை கிராமத்தைச் சார்ந்த லாரன்ஸ் என்பவர் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஒரு வாரத்தில் மிகச்சிறப்பான தூய்மைப் பணிகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் மருத்துவ முகாம்கள், கருத்தரங்குகள் போன்றவை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்றும் தமது கருத்துக்களை பதிவு செய்தார். மேலும் நிர்வாகத்திற்கும் கல்லூரிக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி, திராவிடர் கழக மாவட்ட காப்பாளர் ப. ஆல்பர்ட், ஒன்றியத் தலைவர் கு. பொ. பெரியசாமி, பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பாலசுப்ரமணியன், நகர செயலாளர் க. பாலசந்தர், மாவட்ட செயலாளர் பிச்சைமணி மற்றும் மேனாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மதி தனலெட்சுமி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் அ. ஜெசிமா பேகம் நன்றி கூறினார்.
விழிப்புணர்வு
12.02.2025 அன்று துவக்கவிழாவுடன் கூடிய இந்நாட்டு நலப்பணித்திட்டத்தில் தொடர்ந்து ஏழு நாட்களும் “வளர் இளம் பருவத்திற்கான பிரச்சனைகளும் தீர்வுகளும்”, “போதைப்பொருட்கள் பயன்பாடும் புற்றுநோய் அதிகரிப்பும்”, “சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்”, “ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவுகள் மற்றும் தேசிய ஊட்டச்சத்துக்கான திட்டங்கள்” போன்ற பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடைபெற்றது. சிறு, குறு தொழில் முனைவோர் சங்கத் துணைத் தலைவர் கனக சபாபதி தலைமையில் “பொருளாதாரத்தை மேம்படுத்தும் தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி” 15.02.2025 அன்று நடைபெற்றது. 16.02.2025 அன்று காலை 9 மணியளவில் திருச்சி காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் ஆ. கனகராஜ் மற்றும் பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மருத்துவர் பி. மஞ்சுளாவாணி ஆகியோர் தலைமையில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 117 பேர் பயனடைந்தனர். அன்று மாலை 5 மணியளவில் யோக குரு கவிஞர் சின்னையன் அவர்களால் “யோகா குறித்த செயல்முறை விளக்கம்” அளிக்கப்பட்டது.
மரக்கன்று நடுதல்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் முனைவர் வீ. அன்புராஜா மற்றும் அவரது வாழ்விணையரும் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளருமான செல்வி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களால் மரக்கன்றுகள் நடுதல், கிராம பொது இடங்கள், சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், குடிநீீர் குழாய் சுற்றியுள்ள பகுதிகள் போன்றவை தூய்மை செய்யப்பட்டது. மேலும் பாச்சூர் – கடுக்காத்துரை கிராமத்திலுள்ள பொதுமக்களிடம் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், வாக்குரிமையின் அவசியத்தை மாணவர்கள் பொதுமக்களிடையே எடுத்துரைத்தனர்.
சிலம்பம்
இந்நாட்டு நலப்பணித்திட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் திராவிடர் கழக மண்டலத் தலைவர் ப. ஆல்பர்ட் சிறப்பாக செய்ததுடன் முகாம் நடைபெற உறுதுணையாக திகழ்ந்தார். மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் ச. இராசேந்திரன் மற்றும் திராவிடர் கழக மகளிரணி செயலாளர் மேகலா ஆகியோர் தமது தந்தை பெரியார் இல்லத்தை நாட்டு நலப்பணித்திட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு வழங்கி பேருதவிபுரிந்ததோடு தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்கினர். இலால்குடி மாவட்டத் தலைவர் தே.வால்டேர், மாவட்ட துணைத் தலைவர் ஆசைத்தம்பி, மண்ணச்சநல்லூர் நகரத் தலைவர் முத்துசாமி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் பி.என்.ஆர். அரங்கநாயகி, செல்வராஜ், ஹேமாவதி, நீதிமோகன், கடுக்காத்துரை தி.மு.க. கிளை செயலாளர் மாரியப்பன், உலகநாதன், மாரியப்பன், அசோகன் ஆகியோர் இம்முகாம் நடைபெறுவதற்கான நன்கொடையினை திராவிடர் கழக மாவட்ட குழுவிற்கு வழங்கி சிறப்பித்தனர். இச்சிறப்பு முகாமில் கடுக்காத்துரை கிராமத்தை சார்ந்த பெண் குழந்தைகளின் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.