சென்னை,பிப்.22- நான் பள்ளி எதுவும் நடத்தவில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
எது வேண்டுமானாலும் உளறுவதா?
மேலும், ஹிந்தி திணிப்பு விவகாரத்தில் அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியிருப்பதாவது:-
ஹிந்தி படிக்க வேண்டிய தேவை என்ன? ஹிந்தியை படிப்பதால் என்ன பயன்? ஹிந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கே வேலை இல்லை. ஹிந்தி படித்த லட்சக்கணக்கானோர் தமிழ்நாட்டில் கட்டட வேலைக்கு வருகின்றனர். நான் பள்ளி எதுவும் நடத்தவில்லை. எங்களுக்கு சொந்தமான இடத்தில் பள்ளி தொடங்கப்போவதாக அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டது. அந்தப் பள்ளி இன்னமும் செயல்பட கூடத் தொடங்கவில்லை.
எங்களது இடத்தில் பள்ளியை தொடங்க உள்ளார்கள் என்பதால் எனது பெயரை பயன்படுத்தி யுள்ளனர். அண்ணாமலை நாகரிக அணுகுமுறையை தவிர்த்துவிட்டு எது வேண்டுமானாலும் பேசலாம் எனப் பேசுகிறார். மாணவர்கள் மீது அண்ணாமலைக்கு அக்கறை இருந்தால் ஒன்றிய அரசிடமிருந்து நிதி பெற்றுத்தரட்டும். போஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப் விஷயத்தில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.