துண்டறிக்கைக் கொடுத்தவர் துணைவர் ஆனாரா? அது என்ன கதை?
அப்போது காயிதே மில்லத் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்துக் கொண்டிருந்தேன். மறைமலை இலக்குவனார் அவர்களின் வாழ்விணையர் தான், எனக்குப் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தார். ஒருநாள் கல்லூரி முடித்து வெளியே வரும்போது, ஒருவர் துண்டறிக்கைக் கொடுத்துக் கொண்டிருந்தார். வாங்கிப் படித்தால், அதில் பெரியார் கருத்துகள் இருந்தது. உடனே அது தொடர்பாய் அந்தத் தோழரிடம் பேசினேன். பெரியார் கருத்துகளை நேரடியாக அதுவரை அறிந்ததில்லை. எனினும் எனது தந்தையார் எம்.எஸ்.ஆறுமுகம் வள்ளலார் கொள்கையில் தீவிரமாக இயங்கியவர். மேடைகளிலும் அதுதொடர்பாய் பேசக் கூடியவர்.
எனவே எங்கள் வீட்டிலும் மூடநம்பிக்கைக் கருத்துகளோ, சிலை வழிபாட்டு முறைகளோ இருந்ததில்லை. ஆதலால் பெரியார் கருத்துகளைப் படித்ததும் சீக்கிரம் பிடித்துப் போனது. எனக்குத் துண்டறிக்கை வழங்கிய அந்தத் தோழரின் இயற்பெயர் மனோகரன், சைதை தென்றல் என்று இயக்கத்தில் அழைப்பார்கள். அவர் அஞ்சல் அலுவலகத்தில் பணியாற்றியவர். தோழராக அறிமுகமாகி, நட்பாகி, காதலாகி, இணையராக இணைந்துவிட்டோம்.
வள்ளலார் வழி முற்போக்குப் பாதை என்றாலும், அது மென்மையான முறை. அப்படியிருக்க புரட்சிகர பெரியார்
இயக்கத் தோழரைத் தங்கள் தந்தையார் ஏற்றுக் கொண்டாரா?
சைதை தென்றல் அவர்கள் நேரடியாகவே என் அப்பாவிடம் வந்து பெண் கேட்டார். தொடக்கத்தில் அப்பா மறுத்துவிட, சைதை எம்.பி.பாலு மூலம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. 1982 ஆம் ஆண்டு பேராசிரியர் க.அன்பழகன், ஆசிரியர் கி.வீரமணி இருவரும் எங்களின் ஜாதி மறுப்பு, தாலி மறுப்புச் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். 1978 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பெரியார் திடலில் நடைபெற்றது. அப்போதில் இருந்தே சைதை தென்றல் மும்மரமாக இயங்கியவர்.
அரசுப் பணியில் இருந்ததால் மனோகரன் என்கிற இயற்பெயர், சைதை தென்றலாக மாறியது. அந்தக் காலத்தில் சைதாப்பேட்டை பகுதித் தலைவராகவும் செயல்பட்டவர். போராட்டங்களில் ஈடுபடுவது, தீவிரமாகத் தம்மை வெளிக்காட்டிக் கொள்வது போன்ற காரணங்களால் இணையருக்குப் பணி உயர்வு என்பது இறுதிவரை கிடைக்கவில்லை.
அந்தளவு தீவிரத்தன்மை கொண்டவரா
உங்கள் இணையர்?
தீவிரம் என்பது அவரின் மிகுந்த ஈடுபாட்டைக் குறிக்கிறது.
ம.வீ.கனிமொழி, ம.வீ.அருள்மொழி ஆகிய எங்கள் பிள்ளைகளிடமும், என்னிடமும் கொள்கைகள் குறித்து நிறைய பேசுவார். பெரியார் மற்றும் ஆசிரியரின் வாழ்வியல்கள் குறித்து எடுத்துக் கூறி, அதை எப்படி முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் எனவும் எடுத்துரைப்பார். கனிமொழி அமெரிக்காவில் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி செய்கிறார், அருள்மொழி அரசு வழக்குரைஞராகத் தமிழ்நாட்டில் இருக்கிறார். பெரியாரின் கொள்கை நெறி அவர்களுக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கின்றன. இருவருக்குமே ஆசிரியர் அய்யா தான் சுயமரியாதைத் திருமணம் செய்து வைத்தார்கள்.
ஆசிரியர் அவர்கள் சிறை செல்லும் போராட்டம் அறிவித்தால், இணையரும் பெயர் கொடுப்பார். அரசு ஊழியராக இருப்பதால் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம் என ஆசிரியர் மறுப்பார். 1982 ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு இடம் வேண்டும் என்கிறபோது, எனது தந்தையார் தான் ஒரு பள்ளிக்கூட மைதானத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார். அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக அப்பா இருந்தார். இதற்கு உதவியாக எம்.பி.பாலு உள்ளிட்ட சைதாப்பேட்டை கழகத் தோழர்களுடன் எனது இணையரும் இருந்தார். அந்த மாநாட்டில் நான் முதன்முதலில் பேசினேன். அப்போது நடந்த ஊர்வலத்திலும் கலந்து கொண்டேன். அப்பா வள்ளலார் கொள்கையில் இருந்தாலும், பெரியார் கொள்கையின் மீதும் உணர்வுடன் இருந்தவர்.
தங்கள் அம்மா குறித்து எதுவும் கூறவில்லையே?
அது மிகப்பெரிய துயரம். எங்கள் அம்மா பெயர் ரமணிபாய். எனக்கு 2 வயது இருக்கும் போதே அம்மா மறைந்துவிட்டார். இப்போது எனக்கு 65 வயதாகிறது. அம்மாவை நான் ஒளிப்படத்தில் கூட பார்த்ததில்லை. அது பெரும் குறை என்றாலும், எனது அப்பாதான், எனக்கு அம்மாவாக இருந்து பார்த்துக் கொண்டார். என்னுடன் பிறந்தவர்கள் 4 பேர்.
2 அண்ணன், 2 அக்கா, கடைசியாக நான். எங்கள் அப்பா தான் சமையல் செய்வது, பள்ளிக்கு அனுப்புவது உள்ளிட்ட அனைத்துப் பராமரிப்புப் பணிகளைச் செய்வார். உடன்பிறந்தோர் அனைவருமே நல்ல பணியில் இருக்கிறோம். நான் எம்.எட்., படிக்கிற காலத்தில் தந்தையும் என்னை விட்டு மறைந்துவிட்டார்.
அந்தக் காலத்தில் இருந்தே பெரியார் திடல் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். எனது கல்வி, வேலைத் திட்டம் குறித்து ஆசிரியர் அடிக்கடி கேட்பார். தொடர்ந்து முன்னேறுவதற்கான ஊக்கத்தை எப்போதும் அவர் கொடுப்பார். எனது இந்த வளர்ச்சிக்கு ஆசிரியரின் பங்கும் மிக முக்கியமானது. என்னைக் குறித்து அக்கறையோடு விசாரிக்கும் ஒவ்வொரு தருணத்திலும், ஆசிரியரை எனது தந்தையாகவே உணர்வேன்.
உங்களின் கல்வி நிலை என்ன?
நான் எம்.ஏ., எம்.எட்., முடித்து 10 ஆண்டுகள் பொருளாதார ஆசிரியராகப் பணி புரிந்தேன். பிறகு பி.எல்., முடித்து வழக்குரைஞர் ஆனேன். தொடர்ந்து இளஞ்சிறார்களுக்கான மனோதத்துவம் பயின்றேன். வழக்குரைஞர் தொழிலில் 26 ஆண்டுகள் அனுபவம். இதில் 24 ஆண்டுகளாக இலவச சட்ட உதவி மய்யத்திலும் பணி செய்கிறேன்.
1998 காலகட்டத்தில் வழக்குரைஞர் பணிக்கு மகளிர் மிகக் குறைவாகவே வருவார்கள். இன்றைக்கு ஆண்களுக்குச் சரிநிகராக வந்துவிட்டார்கள். நான் கிரிமினல் வழக்குகளை எடுத்து நடத்துவேன். கொலை வழக்கு, குண்டுவெடிப்பு வழக்கு போன்றவற்றை எல்லாம் எடுத்து நடத்தியுள்ளேன். பொதுவாகக் கிரிமினல் வழக்குகளை மகளிர் எடுத்து நடத்துவதில்லை.
திராவிடர் கழகத் தோழர்களை
உங்கள் பார்வையில் எப்படி மதிப்பிடுவீர்கள்?
மிக உயர்வாக மதிப்பிடுவேன். கொள்கை என்பது நமது தோழர்களால் உறுதிப்படுத்தப்படுகிறது. கும்பகோணம் மாநாட்டிற்காக நாங்கள் போகும்போது விபத்தில் சிக்கிக் கொண்டோம். நள்ளிரவு நேரத்தில் துரை.சக்ரவர்த்தி அய்யா எடுத்த முயற்சியால் மீண்டு வந்தோம். அதேபோல ஈரோடு நிகழ்ச்சி முடித்து இரவு 12 மணி வரை பேருந்து இல்லை. பேராசிரியர் காளிமுத்து, சண்முகம் இருவரும் கடைசி வரை இருந்து உதவி செய்தார்கள். பேச்சு, எழுத்து எதுவாக இருந்தாலும் கவிஞர் கலி.பூங்குன்றன் அய்யா ஆலோசனைகள் கூறுவார்கள். அதேபோல மறைந்த பெரியார் சாக்ரடீசு ‘உண்மை’ இதழில் சட்டத்துறை தொடர்பான கேள்வி – பதில் எழுதச் சொன்னார்.
புலவர் இராமநாதன் அவர்கள் சொல்லிக் கொடுத்த பாரதிதாசன் கவிதைகள் என்றும் நினைவில் நிற்கும். எனது அப்பா இறந்தபோது இடுகாடு செல்லாத நான், எம்.பி.பாலு அவர்கள் இறந்தபோது இடுகாட்டில் சென்று இரங்கல் கூட்டத்தில் பேசி வந்தேன். “கொள்கை என்பது நமது தோழர்களால் உறுதிப் படுத்தப்படுகிறது” என்பதை வலுவாக நான் நம்புகிறேன்.
தங்களின் இயக்கப் பணிகள் குறித்துக் கூறுங்கள்?
எனக்குச் சொந்த ஊரே சென்னை, சைதாப்பேட்டை என்பதால் பெரியார் திடல் வருகை என்பது எளிதானது. எனினும் திருமணத்திற்குப் பிறகே இணையருடன் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன். தென் சென்னை மாவட்ட மகளிரணி பொறுப்பாளர், வழக்குரைஞரணி மாநில இணைச் செயலாளர், வழக்குரைஞரணி மாநிலச் செயலாளர், வழக்குரைஞரணி மாநில அமைப்பாளர் எனப் பல்வேறு பொறுப்புகளை ஆசிரியர் வழங்கி, என்னை இயங்கச் செய்தார்.
அத்துடன் பெரியார் திடலில் வாரந்தோறும் திங்கட்கிழமையில் நடைபெறும் “புதுமை இலக்கியத் தென்றல்” அமைப்பில் செயலாளராக நியமிக்கப்பட்டேன். அதனைத் தொடர்ந்து 20 ஆண்டுகள் தலைவர் பொறுப்பிலும் இருந்தேன். கரோனா காலத்திலும் வாரந்தோறும் இணைய வழியாகக் கூட்டங்களை நடத்தினோம். தற்சமயம் வியாழன் தோறும் நடைபெறும் “பெரியார் நூலக வாசகர் வட்டத்தின்” தலைவராக இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறேன். ஆசிரியர் அவர்களால் செயலவைத் தலைவர் எனும் பொறுப்பிற்கும் நியமிக்கப்பட்டுள்ளேன்.
இயக்கப் போராட்டங்களில் பங்கேற்று
சிறை சென்ற அனுபவம் உண்டா?
1986ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையின் நகலை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீயிட்டுக் கொளுத்தினர். அதில் நானும் கலந்து கொண்டு, சென்னை மத்தியச் சிறையில் 15 நாட்கள் காவலில் இருந்தேன்.
சிறையில் க.பார்வதி, செ.ஹேமலதா தேவி, ஏ.ஜோதி, தையல்நாயகி, பட்டம்மாள், அறிவுக்கொடி, செ.மீரா (ஜெகதீசன்), எம்.சந்திரா, க.கங்கேஸ்வரி, உண்ணாமலை, க.மீனாட்சி, செல்வி இந்திராணி, சொர்ணா (ரங்கநாதன்) உள்ளிட்டோர் ஒன்றாக இருந்தோம். இதில் பெங்களூர் தோழர் சொர்ணா (ரங்கநாதன்) சிறையில் இருந்தவாறே எனக்கு எம்.எட்., படிப்புச் சொல்லிக் கொடுத்தார்.
அதேபோல தாலி அகற்றும் நிகழ்வு 2015 ஆம் ஆண்டு பெரியார் திடலில் நடைபெற்றது. அதை நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. உடனே கழகச் சட்டத்துறை மூலம் நீதிமன்றத்தை அணுகிய போது, நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள் நிகழ்ச்சி நடத்த ஒப்புதல் தந்தார். தீர்ப்பைப் பெற்று மகிழ்வாய் வந்த வேளையில், ஆசிரியர் அவர்கள், “இப்போது நாம் அனுமதி வாங்கினாலும் நாளை காலை அவர்கள் மேல்முறையீட்டிற்குச் செல்வார்கள்”, எனக் கூறினார்கள். எனவே 10 மணிக்கு முன்பாகவே நாம் நிகழ்ச்சியை நடத்திவிட வேண்டும் என அறிவித்து, அவ்வாறே தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிகளில் அது குறிப்பிடத்தகுந்தது. இது பெரியார் மண்தான் என நிரூபித்த தருணங்களில் அதுவும் ஒன்று எனத் தம் இயக்க வரலாற்றை நம்முடன் பகிர்ந்து கொண்டார் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்கள்!