கருஞ்சட்டை
தோழர்களே!
வரும் 23ஆம் தேதி ஞாயிறன்று திராவிடர் கழக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
எதற்காக இந்த ஆர்ப்பாட்டம்?
ஒன்றிய அரசு தேசியக் கல்வி என்ற ஒன்றைத் திணிக்கிறது. அதில் முக்கியமாக மூன்று மொழிகளைப் படிக்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக் கொண்டால்தான் – செயல்படுத்தி னால்தான் கல்விக்காக தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பிஜேபி அரசு அளிக்கவேண்டிய ரூபாய் 2,152 கோடி அளிக்கப்படுமாம்.
தமிழ்நாட்டிற்குக் கொடுக்கப்பட வேண்டிய தொகை, ஒன்றிய அரசு திணிக்கும் அந்தத் தேசியக் கல்வியை – மூன்று மொழிகளைக் கற்றே தீர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றுக் கொள்ளும் மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுமாம்.
பெரும்பாலும் பிஜேபி ஆளும் மாநிலங்களுக்குத் தான் கொடுக்கப்படும்.
தமிழ்நாட்டிற்கென்று தனி கல்விக் கொள்கை இருக்கிறது – மொழிக் கொள்கையும் இருக்கிறது.
இந்தியா ஒரே நாடு அல்ல – பல மாநிலங்களில் கூட்டமைப்பைக் கொண்ட துணைக் கண்டமாகும். அரசமைப்புச் சட்டமும் அதைத்தான் கூறுகிறது.
பல மொழிகள், பல இனங்கள், பல பண்பாடுகள், பல தட்பவெப்ப நிலைகள், பல்வேறு தொழில் வளங்கள் கொண்ட ஒரு துணைக் கண்டத்தில் ஒரே மாதிரி கல்வியை எப்படித் திணிக்க முடியும்?
இதன் பின்னணியில் ஒரு பார்ப்பனீய சதித் திட்டம் உள்ளது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே தேர்தல் என்கிற பாசிச பா.ஜ.க.வின் – ஆர்.எஸ்.எஸின் அஜண்டா இதன் பின்னணியில் இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.
தமிழ்நாடு எந்த வகையிலும் அவர்களின் சித்தாந்தத்தோடு ஒப்ப முடியாத காரணத்தால், தனித் தன்மையுடன் இயங்குகிறது.
தந்தை பெரியாரால் பதப்படுத்தப்பட்ட மண்! சுயமரியாதை இயக்கம் வேரூன்றிய மண்!!
அதிகாரத்தைக் காட்டி, பணத்தைக் காட்டிப் பணிய வைத்து விடலாம் என்று மனப்பால் குடிக்க வேண்டாம்!
இதே மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது எப்படி நடந்து கொண்டார்?
‘‘குஜராத் மக்கள் ரூ.60 ஆயிரம் கோடியை டில்லிக்கு அனுப்புகிறார்கள். ஆனால், திரும்ப வருவது…? குஜ ராத் என்ன பிச்சைக்காரர்கள் மாநிலமா?’’ என்று குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது கேள்வி கேட்டவர்தான் இந்த நரேந்திர மோடி (6.12.2012).
பிரதமரான நிலையில் அதே நரேந்திர மோடி, இப்பொழுது என்ன சொல்லுகிறார்?
‘‘எங்கள் ஊர்; எங்கள் பணம் எனச் சிலர் பேசுகின்ற னர். இது என்ன மாதிரியான பேச்சு? இது நாட்டின் எதிர்காலத்துக்கு ஆபத்தானது!’’ (பிரதமர் மோடி, 7.2.2024).
இப்படி எல்லாம் வீராப்புப் பேசியவர்தான் பிரதம ரானதும் அதிகார ஆணவத் தொனியில் கர்ச்சிக்கிறார்.
அவர்கள் திணிக்கும் தேசியக் கல்வியில் மய்யம் கொண்டிருக்கும் மூன்றாவது மொழியான ஹிந்தியை தலை கீழாக நின்று மூக்கால் தண்ணீர்க் குடித்தாலும் – தமிழ்நாட்டில் அந்தப் பருப்பு வேகாது – வேகவே வேகாது.
கழகத் தோழர்களே! கழக மாவட்டங்கள் அனைத்தி லும் கிடுகிடு போராட்டமாக, ஆர்ப்பாட்டமாக நடக்கட்டும்! நடக்கட்டும்!!
‘நாடே அதிருதுல!’ என்று ஆணவக்காரர்கள் அதிர்ந்து நிற்க வேண்டும்..
ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒருங்கிணைப்பீர்! நாம் கொடுக்கும் போர்க் குரல் டில்லிக் கோட்டையில் எதிரொலிக்கட்டும்!
முழங்கட்டும் முரசம்! ஒன்றிய அரசின் மூர்க்கத்தனமான முரட்டுப் பிடிவாதம் முடிவுக்கு வரட்டும்! வரட்டும்!!
வீழ்க ஹிந்தி ! வெல்க தமிழ்!!