அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் பணி நியமனம் செய்யப்பட்ட வயலூர் முருகன் கோயில் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் இன்று (19.2.2025) நடைபெற்ற குடமுழுக்கில் பங்கேற்றுள்ளது ‘திராவிட மாடல்’ அரசின் சாதனை என்று தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது:-
“திருச்சி, வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக் கோயிலில் இன்று (19.02.2025) நடைபெற்ற திருக்குடமுழுக்குப் பெருவிழாவில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ், பணி நியமனம் பெற்ற அர்ச்சகர்கள் ஜெயபால், பிரபு ஆகியோர் யாகசாலை பூஜை மற்றும் கோபுர கலசங்களில் ‘புனித’ நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்திய நிகழ்வுகளில் பங்கேற்றது தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட, முத்தமிழறிஞர் கலைஞர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் இமாலய வெற்றியாகும். திராவிட மாடல் அரசின் இச்சாதனைகளால் மனம் மகிழ்கிறேன்” என்று தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.