ஒன்றிய அரசு சார்பாக வெள்ள நிவாரண நிதியாக அய்ந்து மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி ரூ.1554.99 கோடியை – ஒன்றிய உள்துறை அமைச்சர் ‘எக்ஸ்’ தளத்தில் அறிவித்துள்ளார்.
ஆந்திரா, தெலங்கானா, நாகலாந்து, ஒடிசா, திரிபுரா ஆகியவை இதில் அடங்கும்.
அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிதிப் பகிர்மானம் ஒரு ரூபாய்கூட அளிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு அறவே நிதி ஒதுக்கப்படவில்லை என்பது எவ்வளவு வன்மம் கொண்ட ஓரவஞ்சனை! நிதி மறுப்பு மூலம் தமிழ்நாட்டு தி.மு.க. ஆட்சிக்கான நிதி நிர்வாகக் குரல் வளையை அழுத்தி மூச்சுத் திணறல், ‘ஆட்சித் திணறல்’ ஏற்படுத்துவதுதான் கூட்டுறவு கூட்டாட்சியின் இலட்சணமா?
தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்கெனவே மறுக்கப்பட்ட பள்ளிக் கல்விக்கான 2,152 கோடி ரூபாயைத் தரப் போராடும் நிலையில், மேலும் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போன்ற இந்த அறிவிப்பு, எதைக் காட்டுகிறது?
தி.மு.க. ஆட்சி, பெரியாரின் ‘திராவிட மாடல்’ என்பதைக் கண்டு எரிச்சல் கொண்டு இந்த அரசியல் ஆணவத்தோடு அடாவடித்தனத்தில் ஈடுபடுவதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழ்நாட்டு மக்களின் பொறுமையைச் சோதிக்கும் அறைகூவல்களே இவை!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
19.2.2025